தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதே தினத்தில் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் வெளியானது. இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

முதல்முறையாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் முதல் முறையாக இசையமைக்க பாடல்கள் அனைத்தும் படத்தின் ரிலீஸ்க்கு முன்பே வைரல் ஹிட் அடித்தன.

தளபதி விஜய் நடிப்பில் பக்கா ஃபேமிலி என்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக வெளிவந்திருக்கும் வாரிசு மற்றும் அஜித் குமார் நடிப்பில் பக்கா ஆக்சன் என்டர்டெய்ன்மென்ட் படமாக வெளிவந்திருக்கும் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களையும் இந்த பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் UK-ல் வாரிசு திரைப்படத்தை வெளியிட்டுள்ள அஹிம்ஸா என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஐந்து நாட்களில் வாரிசு திரைப்படம் படைத்துள்ள வசூல் சாதனை விவரத்தை வெளியிட்டுள்ளது. ரிலீசான ஐந்து நாட்களில் 669412 பவுண்டுகள் வசூலித்து UKல் அதிக வசூலித்துள்ள திரைப்படம் வாரிசு தான் என அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ…