மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழும் விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் மீரா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் மீளா துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸை படக் குழு ஒத்தி வைத்திருக்கிறது. இசையமைப்பாளர் & நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் மீரா, இன்று செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெறும் 16 வயதே ஆகும் விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் மீராவின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தனது மகளின் மறைவால் மிகுந்த சோகத்தில் மூழ்கி இருக்கும் விஜய் ஆண்டனி அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கலாட்டா குழுமம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தளபதி விஜயின் லியோ பட குழுவினர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நேர்ந்துள்ள இந்த மீளா துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக லியோ படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸை ஒத்தி வைத்துள்ளனர். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்து இருக்கும் திரைப்படம் தான் லியோ. பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் லியோ திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக லியோ திரைப்படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சிகளுக்கான VFX பணிகள் தற்போது பெங்களூருவில் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸாக காத்திருக்கிறது.

முன்னதாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளிவரும் என தெரிகிறது. இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்தில் அறிவித்தபடி ரிலீசுக்கு சரியாக ஒரு மாதம் இருக்கும் இந்த சமயத்தில் இந்த மாதம் முழுவதும் லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளிவரும் வகையில் படக்குழு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய நான்கு போஸ்டர்கள் வெளிவரும் என அறிவித்த பட குழு லியோ படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட போஸ்டர்களை கடந்த இரு தினங்களில் வெளியிட்டனர். அடுத்ததாக மலையாள மற்றும் ஹிந்தி போஸ்டர்கள் இன்றும் நாளையும் வெளிவருவதாக இருந்தது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாலும் விஜய் ஆண்டனி அவர்களின் குடும்பத்தினரின் இந்த கடினமான சூழ்நிலையை மனதில் கொண்டும் லியோ திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸை நாளை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு படக்குழு ஒத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.