மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 2வது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லியோ. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் டிரைலர் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாளை மறுநாள் வியாழக்கிழமை அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகமெங்கும் மிகப் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. தளபதி விஜயின் படங்கள் வெளிவரும் சமயங்களில் திரையரங்குகள் அனைத்திலும் திருவிழா கொண்டாட்டங்கள் கலை கட்டும். அந்த வகையில் இந்த லியோ திரைப்படத்தை கொண்டாடுவதற்காக சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி தமிழ்நாடு அரசிடம் இருந்து எப்போது கிடைக்கும் என்றும் படக்குழுவும் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.அனேகமாக நாளை அக்டோபர் 18ஆம் தேதி காலை வெகுவிரைவில் சிறப்பு காட்சிகள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான நேர்காணலில் கலந்து கொண்டு உரையாடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “லியோ LCU யுனிவர்ஸை சேர்ந்ததா?” எனக்கேட்ட போது, “அதை நான் இப்பொழுது வெளியிட முடியாது ஏனென்றால் அதை உடைக்க விருப்பமில்லை” என்றார். தொடர்ந்து பேசும்போது, “போன தடவை நீங்கள் சொல்லி இருந்தீர்கள், “லியோ வந்து முழுக்க முழு 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கப் போகிறது என்று படம் அப்படித்தான் வந்திருக்கிறதா?” எனக்கேட்ட போது, “ஆமாம்.. உங்களுக்கு ட்ரெய்லர் பிடித்து இருந்தது என்றால் அது கண்டிப்பாக அப்படித்தான் வந்திருக்கிறது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் வந்திருக்கிறது ட்ரெய்லர் 2 நிமிடம் 43 நொடிகள் வந்திருக்கிறது. அதனால் படத்தின் ஒரு மினியேச்சர் வெர்ஷனாக தான் இந்த ட்ரெய்லர் அமைந்திருக்கிறது.” என்றார். தொடர்ந்து, “இது எதேர்ச்சியாக நடந்துள்ளதா அல்லது நீங்கள் கணக்குப் பார்த்து இதை வைத்தீர்களா? எனக்கேட்க, “இல்லை நாங்கள் செய்து முடித்த பிறகு வைத்து பார்க்கும் பொழுது அந்த நேரம் எங்களுக்கு தெரிய வந்தது.” என்றார். மேலும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.