மலையாள திரையுலகில் 1986 ல் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘பாப்பன் பிரியப்பட்ட பாப்பன்’ படத்திற்கு கதையெழுதி திரையுலகில் கதையாசிரியராக அறிமுகமானவர் சித்திக். அதன் பின் தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை கதை மற்றும் திரைக்கதை எழுதி மலையாள ரசிகர்களின் ஆதரவை பெற்றார் சித்திக். அதன்பின் கடந்த 1989 ல் வெளியான ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார் சித்திக். முதல் படமே கமர்ஷியலாக ரசிகர்களிடம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களான இன் ஹரிகர் நகர், காட் பாதர், வியட்னாம் காலனி, மக்கள் மகத்மாயத்மாயம் போன்ற படங்களை இயக்கி மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்தார். மேலும் கடந்த 2001 ல் தளபதி விஜய், சூர்யா நடிப்பில் கலக்காலான காமெடி திரைப்படமாக உருவாகி இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘பிரண்ட்ஸ்’ திரைப்படம் மூலம் தமிழிலும் வெற்றி இயக்குனராக களமிறங்கினார். அதன்பின் தொடர்ந்து தமிழில் ‘எங்கள் அண்ணா’, ‘சாது மிரண்டா’, ‘காவலன்’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கினார், அதே நேரத்தில் மலையாளத்திலும் மோகன் லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்கியுள்ளார். மலையாளம், தமிழ் மட்டுமல்லால் இந்தியில் சல்மான் கான் கூட்டணியில் பாடி கார்ட் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்

கடைசியாக இவரது இயக்கத்தில் மலையாளத்தில் கடந்த 2020 ல் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிக் பிரதர் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் சித்திக் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். காலப் போக்கில் நோய் தீவிரமடைய கடந்த மாதம் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் இயக்குனர் சித்திக்கிற்கு திடீரன மரடைப்பு ஏற்பட்டது. மேலும் மோசமடைந்த அவரது உடல்நிலை சீர் நிலைக்கு கொண்டு வர மருத்துவர்கள் தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான வெளியான தகவலையடுத்து இயக்குனர் சித்திக் பூரண குணமடைய ரசிகர்கள் பிராத்தனைகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் சித்திக் சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தார். அவரது மறைவு மலையாள திரையுலகினரை மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதை தொடர்ந்து இயக்குனர் சித்திக்கின் மறைவிற்கு திரைபிரபலங்கள் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.