ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் மக்களையும் இன்று மே 3ம் தேதி சோகத்தில் ஆழ்த்தியது நடிகர் மனோபாலா அவர்களின் இறப்பு செய்தி. இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக சேர்ந்து பின்னர் ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கிய மனோபாலா தொடர்ந்து பிள்ளை நிலா, சிறைப்பறவை, ஊர்க்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், மூடு மந்திரம், மல்லுவேட்டி மைனர், கருப்பு வெள்ளை, நைனா என இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளராக தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனராக திகழும் இயக்குனர் H.வினோத் அவர்களை அறிமுகப்படுத்திய, மனோபாலா அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை திரைப்படம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இவரது தயாரிப்பில் பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை-2 ஆகிய திரைப்படங்களும் தயாராகின.

குறிப்பாக நடிகராக தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்களில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வந்த நடிகர் மனோபாலா அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கே உரித்தான பாடி லாங்குவேஜில் தன்னுடைய ஸ்டைலில் வசனங்கள் பேசி ரசிகர்களை மகிழ்வித்த மனோபாலாவின் இழப்பு பேரிழப்பு தான். கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் மனோபாலா கடந்த 15 நாட்களாக தனது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தனது 69 ஆவது வயதில் தற்போது உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் மனோபாலாவின் மறைவு செய்து கேட்டு மனம் வருந்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு.மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. திரு.மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அந்த இரங்கல் அறிக்கை இதோ…