தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

அதிரடி ஆக்ஷன் படமாக ரிலீஸ்ஸாக உள்ள வலிமை திரைப்படத்தில் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரை வெளியான வலிமை படத்தின் பாடல்கள் & ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் வருகிற பிப்ரவரி 25ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாக உள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீசாக இருந்த வலிமை படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. வலிமை மட்டுமல்லாது இந்திய சினிமாவின் பல பிரமாண்டமான, முக்கிய நட்சத்திரங்கள் நடித்த பெரிய திரைப்படங்களின் ரிலீசும் ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக இயக்குனர் S.S.ராஜமௌலியின் RRR, பிரபாஸின் ராதேஷ்யாம், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது தமிழகத்தில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வந்த நிலையில் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளோடு இயங்க அனுமதி அளித்து புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் இந்த அரசாணையால் ரசிகர்களும் திரையுலகினரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே அடுத்தடுத்து பல திரைப்படங்களின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#BREAKINg || பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% அனுமதி

*உணவகங்களிலும் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி - தமிழக அரசு#TNRelaxation | #TNlockdown | #MKStalin | #TNGovt pic.twitter.com/kLpZsL54wd

— Thanthi TV (@ThanthiTV) February 12, 2022