இன்று பிப்ரவரி 19ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களையும் மக்களையும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியது நடிகர் மயில்சாமி அவர்களின் இறப்பு. தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் நகைச்சுவையில் கலக்கிய மயில்சாமி அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பலருக்கும் தன்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து மகத்தான மனிதராக வலம் வந்துள்ளார். தீவிர சிவபக்தரான மயில்சாமி அவர்கள் சிவராத்திரியில் சமயத்திலேயே உயிரிழந்ததால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் வாடுகிறார்கள். சிவராத்திரி விழாவை முடித்து வீடு திரும்பிய மயில்சாமி அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்த நிலையில் சென்னையின் போரூரில் அமைந்துள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மயில்சாமி அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெறும் 57 வயதே ஆன நடிகர் மயில்சாமியின் இழப்பை ரசிகர்களாலும் பொதுமக்களாலும் திரை பிரபலங்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தாவணி கனவுகள் திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவனாக அறிமுகமாகி தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்து பிரபலமடைந்து பின்னர் மைக்கேல் மதன காமராஜன், பணக்காரன், உழைப்பாளி, சின்ன கவுண்டர், வில், தூள், உன்னை நினைத்து, கில்லி, லண்டன், கந்தசாமி என பல திரைப்படங்களில் தனது நகைச்சுவையால் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்தவர் மயில்சாமி. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வந்த இடியட், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி. RJபாலாஜியின் வீட்ல விசேஷம், The Legend ஆகிய திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்த மயில்சாமி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.

தீவிர சிவ பக்தரான நடிகர் மயில்சாமி இந்த மகா சிவராத்திரியில் சிவன் கோவிலில் சிவராத்திரியை கொண்டாடியுள்ளார் அவரோடு தமிழ் சினிமாவின் முன்னணி இசை கலைஞரான ட்ரம்ஸ் சிவமணி அவர்களும் அப்போது உடன் இருந்துள்ளார். இந்த சிவராத்திரி நிகழ்வு முடிந்து அதிகாலையில் வீடு திரும்பிய டிரம்ஸ் சிவமணி அவர்களுக்கு அடுத்த சில நேரங்களில் மயில்சாமியின் இறப்பு செய்தி வந்து சேர்ந்துள்ளது. இதனால் மிகுந்த வேதனை அடைந்த ட்ரம்ஸ் சிவமணி அவர்கள் இது குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் மிகுந்த வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். பல கோடி ரசிகர்களும் பொதுமக்களும் திரை பிரபலங்களும் நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் மயில்சாமியின் கடைசி டப்பிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி கிளாஸ்மேட்ஸ் எனும் திரைப்படத்திற்காக நடிகர் மயில்சாமி தனது டப்பிங் செய்துள்ளார். தனக்கே உரித்தான புத்துணர்வோடும் உற்சாகத்தோடும் வசனங்களை பேசும் மயில்சாமி எப்படி உயிர் இழந்தார் என அந்த வீடியோவை ரசிகர்கள் வேதனையோடு பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ இதோ…