இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த காவாலா பாடலில் அட்டகாசமாக நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகை தமன்னா, ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக ரிலீஸ் ஆகும் போலா ஷங்கர் படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தமன்னா மலையாளத்தில் பாந்த்ரா மற்றும் ஹிந்தியில் வேதா உள்ளிட்ட படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் தமன்னா ரசிகர்கள் கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட நடிகை தமன்னா தனது துறை பயணத்தின் பல சுவாரஸ்யமான அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசும் போது, "உங்களுடைய ஆரம்ப கட்டத்தில் செய்த திரைப்படங்கள் “கேடி” படமாக இருக்கட்டும், “கல்லூரி” படமாக இருக்கட்டும், எங்களுக்கு ஒரு தனிப்பட்ட ஃபேவரட் படம் இருக்கிறது அது “ஆனந்த தாண்டவம்”. இப்போது வரைக்கும் அந்த படத்திற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. “மது” என்ற ஒரு கதாபாத்திரம் இனிமையான மிகவும் அப்பாவியான ஒரு கதாபாத்திரம் குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் காட்சியில் நீங்கள் அந்த காரில் உட்கார்ந்து அழுவது, குடிக்கு அடிமையாகி விட்டேன் என்று சொல்வது, ஒரு அழகான படம். அந்தப் படம் நடிக்கும் போது நீங்கள் ஒரு டீனேஜ் பெண் அந்த ஒரு மெச்சூரிட்டியோடு அந்த படத்தை எப்படி கையாண்டீர்கள்..?" எனக் கேட்ட போது,

“நான் இப்போது 2023ல் அந்த படம் பார்க்கிறேன். இது மிகவும் TOXIC RELATIONSHIP. மிகவும் விஷதானமான ஒரு நபர். எனக்கு மது ஒரு நல்லவராக தெரியவில்லை. மது மிகவும் எமோஷனலான குழப்பமடைந்த ஒரு நபர். அப்போது எல்லைகள் எல்லாம் தெரியாது நான் எல்லைகள் என்ற வார்த்தைகளையே கேட்கவில்லை அந்த சமயத்தில் TOXIC RELATIONSHIP என்ற வார்த்தையையும் நான் கேட்டதில்லை. அந்த சமயத்தில் அது மாதிரியே கிடையாது காதல் என்றால் ஒரு உரிமை. நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றால் அவர் உங்கள் மீது உங்களுக்கு ஒரு உரிமை இருக்கிறது அவர்கள் மீது நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் அது தப்பு. அவர் உங்களுடைய அடிமை கிடையாது அவருக்கு அவருடைய வாழ்க்கை இருக்கிறது, உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கை இருக்கிறது. அதை மதித்து இருக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அது மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம். எனக்கு தெரியவில்லை நான் அதை எப்படி நடிப்பேன் என்று, ஆனால் அந்த சமயத்தில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் என்னுடைய பயணத்தில் அந்த ஒரு தருணத்தில் நான் என்னுடைய கேரக்டரை மதிப்பிட்டது கிடையாது. எல்லோருமே பர்ஃபெக்ட் கிடையாது அதனால்தான் மது எல்லாவற்றிலும் தப்பாக இருந்தாள் இருப்பினும் மிக அழகாக இருந்தாள்…” என பதில் அளித்து இருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை தமன்னாவின் அந்த முழு வீடியோ இதோ…