கிட்டத்தட்ட கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் தனக்கென தனி ஸ்டைலில் நடித்து மக்கள் மனதை வென்ற கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அந்த வகையில் முதல் முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு இணைந்து நடிகை தமன்னா நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இண்டஸ்ட்ரி ஹிட்டாக பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடலில் அட்டகாசமாக நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்த நடிகை தமன்னா, கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக ரிலீஸான போலா ஷங்கர் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை தமன்னா நடிக்கும் அடுத்தடுத்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் தமன்னா, மலையாளத்தில் பாந்த்ரா மற்றும் ஹிந்தியில் வேதா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நமக்கு கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தமன்னா தனது திரைப்பயணம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் மேலும் ரசிகர்களின் கேள்விகளுக்கும் அட்டகாசமாக பதில் அளித்து வந்தார் அந்த வகையில், "உங்களை BODY SHAME பண்ணி ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ் வருகின்றன அல்லவா அதைப் பார்த்து வருந்துவீர்களா அல்லது தவிர்த்து விடுவீர்களா?" என ரசிகர் ஒருவர் கேட்டபோது, "நான் எப்படி உணர்வேன் என்றால் நாம் மனிதர்களாக இருப்பதால் ஒரு நிமிடம் அதைப் பார்த்துவிட்டு ஏன் இவ்வளவு வெறுப்பு காட்டுகிறார்கள் ஏன் இவ்வளவு தவறாக யோசிக்கிறார்கள் என ஒரு எண்ணம் நிச்சயமாக மனதில் கடந்து போகும். இதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது ஒருவேளை சிலர் இப்படி நினைக்கிறார்கள் என்றால் அது அவர்கள் யார் என்பதை காட்டுகிறது. நிச்சயமாக ட்ரோல்கள் இருக்கும், வெறுப்புகள் இருக்கும் ஆனால் நாம் நம்முடைய வேலையை செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். எனக்கும் இதை பார்க்கும்போது கஷ்டமாக தான் இருக்கும் ஆனால் அதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அது மிகவும் சொற்பமான சதவிகிதம் தான் அதிகப்படியான அன்பு கொடுப்பவர்களை நாம் மறந்து விட முடியாது. அதிகப்படியான அன்பு கிடைக்கும் போது கொஞ்சம் வெறுப்பும் கிடைக்க தான் செய்யும். இது இரண்டும் சேர்ந்து தான் வரும். ஒரு பெண் இது எல்லாம் ஏற்றுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். மேலும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்காக பெருமைப்பட வேண்டும்." என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான கேள்விகளுக்கு அசத்தலாக பதில் அளித்த நடிகை தமன்னாவின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.