இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சித்தார்த்தன் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள டக்கர் திரைப்படம் தான் சித்தார்த்தின் திரை பயணத்திலேயே அதிகத் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய நடிகர் சித்தார்த் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து திரைப்படத்தில் சூர்யா, மாதவன் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த சித்தார்த் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிகப்பு மஞ்சள் பச்சை மற்றும் அருவம் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. அதேபோல் தெலுங்கில் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஷர்வானந்த் உடன் இணைந்து மகா சமுத்திரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார்.

முன்னதாக பாய்ஸ் படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் ஷங்கர் உடன் இணைந்த சித்தார்த், உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்திலும் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி படங்களின் இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் தனது சொந்த தயாரிப்பில் தற்போது தயாராகி வரும் சித்தா திரைப்படத்திலும் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார்.

இதுபோக பெயரிடப்படாத புதிய ரொமான்டிக் திரைப்படத்திலும் நடித்துவரும் சித்தார்த் தொடர்ந்து டக்கர் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் உடன் மீண்டும் இன்னொரு புது படத்தில் இணைய இருக்கிறார். கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்திருக்கும் டக்கர் திரைப்படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படத்திற்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில், ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக இன்று ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி இருக்கும் டக்கர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் டக்கர் திரைப்படம் தான் சித்தார்த்தின் திரைப் பயணத்திலேயே அதிகத் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசான திரைப்படம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் 356, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 376, கேரளாவில் 87, கர்நாடகாவில் 60, வட இந்தியாவில் 53 மற்றும் வெளிநாடுகளில் 302 என மொத்தம் 1234-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் பிரம்மாண்டமாக ரிலீஸாகி தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.