பல ஆண்டுகளாக சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த ஸ்ரீனிவாச மூர்த்தி இன்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இந்த வருத்ததிற்குள்ளான செய்தி தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து தெலுங்கு சினிமா பிரபலங்களும், தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

தெலுங்கு துறையில் மிகவும் பிரபலமான குரல்களில் ஒன்று ஸ்ரீனிவாச மூர்த்தி அவர்களுடையது. 1990 களில் தனது டப்பிங் வாழ்க்கையை தொடர்ந்த ஸ்ரீனிவாச மூர்த்தி இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'ஒக்கே ஒக்கடு' படத்தில் அர்ஜூனுக்கு தெலுங்கு குரல் கொடுத்து பிரபலமடைந்தார். அதன்பின் ஏராளமான படங்களுக்கு குரல் கொடுத்த இவர் கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படும் போதோ அல்லது வேற்று மொழி நடிகர்கள் தெலுங்கில் நடிக்கும் போதும் இவரது பெயர் நிச்சயம் டப் செய்யப்படும் கலைஞர்கள் பட்டியலில் இருக்கும்.‌ அந்தளவு தெலுங்கு டப்பிங் திரையுலகில் புகழ்பெற்றவர் ஸ்ரீனிவாச மூர்த்தி. குறிப்பாக சூர்யா நடித்த சிங்கம் தொடரில் சூர்யாவிற்கு பொறுத்தமான குரல் கொடுத்து பிரபலமடைந்தார்.

அதன்பின் சூர்யாவின் தெலுங்கு டப் படங்களுக்கு இவர்தான் சூர்யாவிற்கு குரல். மேலும் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு, அந்நியன் விக்ரமிற்கு தெலுங்கில் குரல் கொடுள்ளார். மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், சல்மான் கான் படங்களுக்கும் இவர்தான் குரல். சமீபத்தில் மாதவன் நடித்து இயக்கிய ‘ராகேட்ரி’ திரைப்படத்தில் மாதவனுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்ரீனிவாச மூர்த்தி நடிகர் சூர்யா இது குறித்து வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது எனக்கு மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு .. ஸ்ரீனிவாசமூர்த்தி உங்களுடைய குரல் மற்றும் உணர்ச்சிகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை நிச்சயம் மிஸ் செய்வேன் ஐயா! சீக்கிரம் சென்றுவிட்டார்” என பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் ஸ்ரீனிவாச மூர்த்தியின் குரல் இதன் பிறகு ஒலிக்காது. குறிப்பாக சூர்யா படங்களை தெலுங்கில் விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு இது பேரிழப்பு தான். இணையத்தில் தற்போது இவரது மறைவையொட்டி ரசிகர்கள் பிரபலங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.