ஆகச் சிறந்த நடிகராக திகழும் சூர்யாவின் திரைப் பயணத்தில் 42வது திரைப்படமாக கங்குவா திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் கங்குவா திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வியாபாரத்தை செய்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். அமேசான் பிரைம் வீடியோவில் தென்னிந்தியாவிற்கான டிஜிட்டல் உரிமத்திற்கு மட்டுமே கங்குவா திரைப்படம் 80 கோடி ரூபாய் வியாபாரம் செய்திருப்பதாக அறிவித்துள்ள KE.ஞானவேல் ராஜா அவர்கள் தமிழ் சினிமாவிலேயே இது ஒரு பென்ச் மார்க் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் படத்தின் முதல் அறிவிப்பு வெளிவந்த சமயத்தில் இருந்தே சூர்யா 42 படமான கங்குவா திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் கிளம்பியது.

படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே அமேசான் பிரைம் வீடியோவில் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் செய்துள்ள கங்குவா திரைப்படம் ரிலீசுக்கு முன்பே இன்னும் மிகப்பெரிய வியாபார ரீதியான சாதனைகளை படைக்கும் எனவும் ரிலீசுக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைக்கும் எனவும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. பிரம்மிப்பின் உச்சமாக பக்கா பீரியட் ஆக்சன் திரைப்படமாக மிரட்டலான போர் காட்சிகளோடு உருவாகும் கங்குவா திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்காகவே பல கோடி ரூபாய் செலவில் பிரத்யேகமாக கங்குவா திரைப்படத்திற்கான VFX கிராபிக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே கங்குவா திரைப்படம் அடுத்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில்தான் வெளியாகும் எனவும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

தற்போது கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் கங்குவா படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கங்குவா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அடுத்த சில வாரங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 10 மொழிகளில் கங்குவா படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவரும் கங்குவா டீசருக்கு ஐந்து மொழிகளில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் ஒரு நடிகர் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பதும் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

இந்த டீசருக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாகவும் இதற்காக சூர்யா மிரட்டலான லுக்கில் தனது உடலை மாற்றி இருப்பதாகவும் தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் நிலையில், கங்குவா திரைப்படத்திற்காக மரண மாஸ் லுக்கிற்கு மாறி இருக்கும் சூர்யாவின் டிரான்ஸ்பர்மேஷன் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியில் உள்ளது. நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தின் பிரத்யேக தோற்றத்திற்காக கடினமாக உடற்பயிற்சி செய்யும் ஒரு புகைப்படம் தான் அது. சற்று முன்பு வெளியான சூர்யாவின் மிரட்டலான இந்த புகைப்படம் சோசியல் மீடியாவை அதிர வைத்துள்ளது. அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.