தமிழ் திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாகவும் கருப்பு வெள்ளை காலம் முதல் இன்றைய நவீன சினிமா வரை பல தசாப்தங்களாக பயணித்து வரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோ. 170 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து காலத்தால் அழிக்க முடியாத வரலாற்றை உருவாக்கிய ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் அன்றைய சினிமா முதல் இன்றைய சினிமா வரை பயன்படுத்தப்பட்ட முக்கிய கருவிகள். உபகரணங்கள் போன்றவற்றை காட்சி படுத்தும் வகையில் ஏவிஎம் பாரம்பரிய அருங்காட்சியம் என்ற ஒன்றை துவங்கியது. இந்த கண்காட்சியகத்தில் 1910-ல் இருந்து 2000 ஆண்டு வரையிலான 40-க்கும் மேற்பட்ட பாரம்பரிய கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஒளிப்பதிவு கேமராக்கள், ஆடியோ-வீடியோ சாதனங்கள் மற்றும் பல ஆச்சர்யமூட்டும் விஷயங்களையும் பொருட்களையும் உள்ளடக்கி வைத்துள்ளனர். சினிமாவின் பெருமையை பேசும் இந்த கண்காட்சியகத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தொடக்க விழாவில் உலகநாயகன் கமல் ஹாசன், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிரந்தர கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு விடப் பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ 200, சிறியவர்களுக்கு ரூ 150 என்று வசூலித்து வருகின்றனர். இந்த காட்சி குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிகம் பேசப் பட்டு வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ஏவிஎம் எ=கண்காட்சியகத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கண்காட்சியில் இடம் பெற்ற பழமையான கார்களையும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் திரைப்பட கருவிகளை ரஜினிகாந்த் ஆர்வத்துடன் பார்வையிட்டார். மேலும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சிலை முன்பாக ஏவிஎம் சரவணன் மற்றும் கண்காட்சியத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் அருணா ஆகியோருடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த கண்காட்சியகத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து பாக்ஸ் ஆபிஸ் நிரப்பிய முரட்டு காளை, பாயும் புலி, போக்கிரி ராஜா, நல்லவனுக்கு நல்லவன், மனிதன். எஜமான், சிவாஜி உள்ளிட்ட படங்களில் பயன்படுத்தப் பட்ட பல பொருட்கள் உபகரணங்களை ரஜினிகாந்த் பார்வையிட்டு மகிழ்ந்தார். மேலும் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படத்தில் இடம் பெற்ற சிவாஜி கதாபாத்திரத்தின் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.