கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷராப் ஆகியோர் சிறப்பு கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, ஆடுகளம் கிஷோர், மிர்னா, ரெடின் கிங்ஸ்லி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ஆர் நிர்மல் படதொகுப்பு செய்துள்ளார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் ஏற்கனவே வெளியான காவாலா, ஹுக்கும், ஜுஜுபி ஆகிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்று டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அண்மையில் இப்படத்தின் டிரைலர் ‘Jailer Showcase என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களின் ஆவலை மிகப்பெரிய அளவு அதிகரித்தது. அதன்படி அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகளவில் மிகப்பெரிய அளவு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதற்கான முன் பதிவு தற்போது பல இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தில் அப்பா மகன் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த ரத்தமாரே பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் இயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலை பின்னணி பாடகர் விஷால் மிஸ்ரா பாடியுள்ளார். மூன்று தலைமுறையினரின் அன்பை அடிப்படையாக கொண்டு உருவான இப்பாடல் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஜெயிலர் படக்குழு சில காட்சிகளுடன் ரத்தமாரே பாடலை வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் தற்போது ரத்தமாரே பாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.