எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அன்றும் இன்றும் என்றும் என ஒட்டுமொத்த இந்திய திரை உலக ரசிகர்களும் கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. கடைசியாக ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற தவறியது.

அதேபோல் தனக்கென தனி பாணியில் பக்கா டார்க் காமெடி ஆக்ஷன் என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வசூல் ரீதியில் வெற்றி பெற்ற போதும் சில எதிர்மறை விமர்சனங்களின் காரணத்தினால் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த அத்தனை எதிர்மறை விமர்சனங்கள் & ட்ரோல்களுக்கு நடுவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம் ரிலீஸானது. தனது முந்தைய எதிர்மறை விமர்சனங்களை சொல்லி அடித்தது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக கொடுத்துள்ளார். மற்றொரு மிகப்பெரிய பலமாக இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் தனது பின்னணி இசையலும் பாடல்களாலும் அரங்கை அதிர வைத்தார். ஒருபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஸ்டைல், மாஸ் என செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் அனிருத்தின் இசை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் சென்று திரையரங்குகளில் ரசிகர்களை BEAST MODEக்கு அழைத்துச் செல்கிறார்.

ரிலீசான நான்கு நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே 105 கோடி வரை ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வசூலித்தது. இந்த நிலையில் உலக அளவில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் வார வசூல் விவரம் தற்போது வெளியானது. முதல் வார முடிவில் ஜெயிலர் திரைப்படம் 375.40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிகபட்சமாக வசூலித்த படம் ஜெயிலர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரசிகர்கள் ரிப்பீட் மோட்டில் ஜெயிலர் திரைப்படத்தை கொண்டாடி வருவதால் வரும் நாட்களில் இன்னும் பல வசூல் சாதனைகள் செய்து இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.