இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. என்றென்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 70 வயதை கடந்தும் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொயதீன் பாய் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சிறப்பு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். அவருடன் இணைந்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் அவர்களும் முக்கிய இடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மீண்டும் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். தனது திரை பயணத்தில் 170வது திரைப்படமாக நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்தை நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். பக்கா ஆக்சன் என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரது வழக்கமான டார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பை நிறைவு செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கேக் வெட்ட, படக்குழுவினர் கொண்டாடும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியானது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமத்தை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…