சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண் சிவா பகிர்ந்து கொண்டார். ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோவாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முதல்முறையாக கோலமாவு கோகிலா டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரது வழக்கமான டார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நமது கலாட்டா சினிமா சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த ஜெயிலர் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண் சிவா அவர்கள், பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் இயக்குனர் நெல்சன் அவர்களது இயக்கத்தில் அவர் ஆக்சன் காட்சிகளை கையாளும் விதம் பற்றி அவரிடம் கேட்டபோது,

“நான் கோலமாவு கோகிலா படம் பார்த்தேன் அப்போதே இந்த இயக்குனரோடு பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். அந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படத்தின் போஸ்டராகட்டும் ட்ரைலராகட்டும் வித்தியாசமான ஒரு டைட்டில் படமும் ரொம்ப நன்றாக இருந்தது. நானே போன் செய்தேன் நெல்சன் சாருக்கு, “சார் நான் உங்களோடு பணியாற்ற வேண்டும்” என கேட்டேன். அப்போது அவர் பீஸ்ட் படம் இயக்கிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் பணியாற்ற முடியவில்லை அப்போது அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்கள் பணியாற்றி வந்தனர். “சரி அடுத்த படத்தில் பண்ணலாம் மாஸ்டர்” என சொன்னார். அதன்படியே திடீரென ஒரு நாள் போன் செய்தார் “ரஜினி சார் படம் பண்ண வேண்டும்” என்றார். இயக்குனரையும் பிடிக்கும் ரஜினி சாருக்கு நான் ரசிகர் அப்படி என்றால் எப்படி இருக்கும் என பார்த்துக் கொள்ளுங்கள். நெல்சன் சாருடைய விஷயமும் இருக்கும் அதே நேரத்தில் ஆக்ஷனும் இருக்கும்.” என பதில் அளித்து இருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் பற்றி இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஸ்டன்ட் இயக்குனர் ஸ்டண் சிவாவின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.