இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையிலான பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்து உச்ச நட்சத்திர இயக்குனராக திகழும் SS.ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் RRR. தொடர்ச்சியாக மக்கள் விரும்பும் அட்டகாசமான என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் SS.ராஜமௌலி அவர்கள், இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1 & 2 ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப் பெரிய பிளாக்பஸ்டராக வெற்றி பெற்று PAN INDIA படம் என்ற வார்த்தையை அதிகம் புழக்கத்திற்கு கொண்டு வந்தது என சொல்லலாம். அந்த வகையில் கடைசியாக SS.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து வெளிவந்த RRR திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை இல்லாத அளவிற்கான வசூல் சாதனைகள் படைத்தது. உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த RRR ஜப்பான் உட்பட வெளிநாடுகளிலும் அந்தந்த நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக RRR நாட்டு நாட்டு பாடல் மிகப் பிரபலமாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. மேலும் வெற்றியின் உச்சமாக சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதையும் வென்றது.

அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை SS.ராஜமௌலி இயக்க இருக்கிறார். இது குறித்து அதிரடி அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே SS.ராஜமௌலி இயக்க விரும்பும் படம் குறித்த ருசிகர தகவல் தற்போது வெளியானது. இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான மகேந்திரா நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் மகேந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இந்தியாவின் பழமையான நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகத்தின் பழங்கால நகரமான ஹரப்பா தொடர்பான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, "இந்த புகைப்படங்கள் நம் வரலாற்றை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது மட்டுமல்லாமல் நல்ல ஒரு கற்பனையையும் தூண்டுகிறது. இந்த பழங்கால நாகரிக வரலாற்றை அடிப்படையாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்குங்கள் அவை நமக்கு வரலாறு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்" என இயக்குனர் SS.ராஜமௌலியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஆனந்த் மகேந்திரா அவர்களின் ட்வீட்டுக்கு பதில் கொடுக்கும் வகையில், “ஆமாம் சார் தோலாவிராவில் மகதீரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் பழமை வாய்ந்த ஒரு மரத்தை பார்த்தேன். அது மிகவும் சிதைந்து போய் இருந்தது. அதை பார்க்கும்போது எனக்கு சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரத்தின் மூலம் விவரிக்கும்படியான ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என தோன்றியது. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நான் பாகிஸ்தான் சென்றிருந்தேன். அப்போது மொஹஞ்சதாரோவிற்கு செல்ல வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தேன் ஆனால் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது" என SS.ராஜமௌலி பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பீரியட் சார்ந்த திரைப்படங்களை பிரம்மாண்டங்களாக கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் SS.ராஜமௌலி சிந்து சமவெளி நாகரிகத்தை மையப்படுத்திய ஒரு கலைக்களத்தை கையாண்டு மற்றும் ஒரு பிரம்மிப்பான படைப்பை கொடுத்தால், அது எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்சமயம் மகேஷ்பாபுவின் திரைப்படத்தில் கவனம் செலுத்தி வரும் SS.ராஜமௌலி விரைவில் இந்த சிந்து சமவெளி நாகரிகத்தை மையப்படுத்திய திரைப்படத்தை கையில் எடுப்பாரா? என்பதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களோடு காத்திருந்து பார்ப்போம்.