ஷாருக் கானின் ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் அதிகமான வசூலை விட தளபதி விஜயின் லியோ திரைப்படம் எட்டியது எப்படி? என்பது குறித்து தயாரிப்பாளர் SS.லலித் குமார் அவர்கள் விளக்கமளித்து இருக்கிறார். தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோ பாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளிவந்த லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 148 கோடிக்கும் மேல் வசூலித்து உலக அளவில் அதிகபட்ச வசூல் செய்த இந்திய படம் என சாதனை படைத்திருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்த ஜவான் திரைப்படம் லியோ திரைப்படத்தை விட அதிக திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன நிலையில் வசூல் ரீதியில் முதல் நாளில் லியோ திரைப்படம் அதிக வசூல் செய்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், இந்த வருடத்தில் அதிகபட்ச வசூல் செய்த படம் என்று பார்க்கும் போது ஜவான் திரைப்படம் இருக்கிறது கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் பார்த்தீர்கள் என்றால் இன்னும் பெரிதாக இருந்தது நிறைய திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஆனாலும் லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அதை விட அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து நிறைய கேள்விகள் வருகின்றன அதற்கு நீங்களே பதில் கொடுத்து விட்டால் முற்றுப்புள்ளி வைத்த மாதிரி இருக்கும்.. என கேட்ட போது, “ தென்னிந்திய முழுவதும் லியோ படம் நன்றாக பண்ணுகிறது. தென்னிந்தியாவில் மட்டுமல்லாது FMS மார்க்கெட்டிலும் நன்றாக பண்ணுகிறது. அதனால் தான் இந்த வசூல் வந்திருக்கிறது. இப்பொழுது ஒரு வேலை தமிழ்நாட்டில் மட்டும் பண்ணுகிறது கேரளாவில் பண்ணவில்லை என்றால் கம்மியாக இருந்திருக்கும் கேரளாவிலும் நன்றாக பண்ணுகிறது கர்நாடகாவிலும் பண்ணுகிறது ஆந்திராவிலும் பண்ணுகிறது அப்படி என்றால் தென்னிந்திய மார்க்கெட் முழுவதும் நன்றாக இருக்கிறது அதே மாதிரி FMS மார்க்கெட்டும் நன்றாக இருக்கிறது. அதுதான் காரணம் என்று சொல்லலாம்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரவித்குமார் அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.