பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட மலிங்கா உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணி, வரும் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த போட்டிகளில் விளையாட விருப்பும் உள்ள வீரர்கள், அணி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் தொடருக்கான போட்டியில் விளையாட விருப்பம் இல்லை என்று டி 20 அணியின் கேப்டன் மலிங்கா தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா உள்ளிட்ட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம், பாகிஸ்தானில் விளையாட விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

முன்னதாக, 2009 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றிருந்த இலங்கை அணி வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடத் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், தற்போது இலங்கை அணி வீரர்களும் மறுத்துள்ளனர்.