இந்திய சினிமாவின் தலைசிறந்த பட தொகுப்பாளர்களில் ஒருவராக கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக 600 திரைப்படங்களுக்கு மேல் படத்தொகுப்பு செய்தவர் ஸ்ரீகர் பிரசாத். அந்த வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரிலீஸாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இயக்குனர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் அவர்கள், தனது திரைப்பயணத்தின் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் துப்பாக்கி திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பேசியபோது, "இந்த இடைவேளை காட்சியை படம் பிடிக்கும்போது நிறைய கடினங்கள் இருந்தன. ரெண்டு பேர் 12 பேரை சுட வேண்டும் என்றால் அது ஒரு மிக நீளமான படப்பிடிப்பாக இருக்கும். அதனுடைய RUSHES கிட்டத்தட்ட 12 - 13 மணி நேரங்களுக்கு இருக்கும். அதிலிருந்து சுருக்கி சுருக்கி நாம் எடுக்க வேண்டும். 12 பேர் 12 பேரை பின்தொடர்வது போலவே எடுத்து பார்த்தால் கிட்டத்தட்ட அந்த காட்சி 25 நிமிடங்கள் வந்தது. இவ்வளவு நீளத்தை நாம் பார்க்க முடியாது ஏனென்றால் அது திரும்பத் திரும்ப வருவது போல் இருக்கும். அதன் பிறகு தான் சில வழிமுறைகளை பயன்படுத்தி ஸ்பிலிட் ஸ்க்ரீன் போட்டு நான்கு பேர் நான்கு பேரை பின்தொடர்வது போல எட்டு பேர் எட்டு பேரை பின் தொடர்வது போல 12 பேர் 12 பேரை பின் தொடர்வது போல வைத்து கடைசியில் என்ன நடந்தது என்பதற்கு கொஞ்சம் சீக்கிரமாக சென்று விட்டோம்." என பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து, சமீபத்தில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் துப்பாக்கி திரைப்படத்தின் சமயத்தில் ஸ்ரீகர் பிரசாத் அவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், தனக்கு அப்போது துப்பாக்கி திரைப்படத்தின் நீளம் அதிகமாக இருந்ததால் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் காட்சியை நீக்க வேண்டி தேவைப்பட்ட சமயத்தில், இடைவேளை காட்சிக்கு முந்தைய காட்சியில் தளபதி விஜய் அந்த காட்சிக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ள திட்டமிட்டும் காட்சி கொஞ்சம் நீளமாக இருப்பதாகவும் அதை குறைத்து விடும்படியும் ஸ்ரீகர் பிரசாத் அவர்களிடம் கேட்க, அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய ஸ்ரீகர் பிரசாத் அந்த காட்சியை அப்படியே வைத்தது குறித்து பேசினார்.

இந்நிலையில், இந்த வீடியோவை ஸ்ரீகர் பிரசாத் அவர்களிடம் காண்பித்து இதுகுறித்து அவரிடம் பேசிய போது, "மொத்த படத்தையும் எடிட் செய்து பார்த்தபோது அந்தக் காட்சியை ஒரு சீனாக உணர்ந்து வைத்திருந்தோம். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் சரி என்று சொல்லி இருந்தார். ஆனால் கடைசியில் படமாக ஒரு குறிப்பிட்ட நீளம் வந்தது. அப்போது இது அவ்வளவு தேவை இல்லை என அவர் சொன்னார். அப்போது நான் சொன்னேன் இல்ல சார் அவர் கண்டுபிடித்தார் என்று நாம் சொல்கிறோம் அதை கண்டுபிடித்ததற்கான உணர்வு வரவில்லை என்றால் என்ன இன்டெலிஜென்ட்டாக செய்தார் சும்மா இப்படி பார்த்தார் உடனே கண்டுபிடித்து விட்டார் என்று சொன்னால் வழக்கமாக சொல்வது போல் ஆகிவிடும். அவர் வேறு எந்த காட்சிகளிலும் அதை கட் செய்ய முடியாது இது வெறும் மாண்டேஜ் காட்சிகள் தானே, வந்தார் பார்த்தார் கண்டுபிடித்துவிட்டார் என்பது போல அவர் வைத்துக் கொண்டார். அது அவருக்கு மகிழ்ச்சிகரமாகவும் இருந்தது. எனக்கு என்னவென்றால் ஆரம்பத்தில் இருந்து விஜய் அவர்களின் கதாபாத்திரம் வழக்கமான ஒரு மாஸ் ஹீரோ கதாபாத்திரமாக காட்டாமல் சாதாரணமாக காட்டப்பட்டது. அப்படி என்றால் சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு விஷயத்தை எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதற்கு அதற்கான ஒரு நேரம் வேண்டும். அதற்கு ஒரு 30 நொடிகளோ ஒரு நிமிடமோ அதற்கான ஒரு இசையோடு இருந்தால் நன்றாக இருக்கும். பார்த்தார் உடனே கண்டுபிடித்துவிட்டார் என்பது போல இருந்தால் அது நம்புகிற மாதிரி இல்லை. அந்த விஷயம் தான் இது. இதை அவருக்கு புரிய வைத்து அதற்கான இசையை சேர்த்து மொத்த படத்தில் வரும் போது ஒரு இன்டெலிஜென்ட்டான மனிதர் அதற்காக அந்த ஒரு நேரத்தை எடுத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறார் என செய்தேன்" என படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…