தற்சமயம் காஷ்மீரில் நடைபெற்று வரும் தனது SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து இந்த 2023 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் 77வது சுதந்திர தின விழாவிற்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயனின் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. சின்னத்திரையில் இருந்து தனது பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையின் வெற்றி நாயகனாக முடிசூடி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ஒவ்வொரு திரைப்படங்களும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ரசிக்கும்படியாக பார்த்து பார்த்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று 89 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

முன்னதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முக்கியமாக அயலான் திரைப்படத்தின் இறுதி கட்ட VFX பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகின்றன. வருகிற தீபாவளி வெளியீடாக அயலான் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்ததாக இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் சிவகார்த்திகேயன் இணைய இருக்கிறார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் SK21 திரைப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த SK21 திரைப்படத்திற்காக தற்போது மிரட்டலான புதிய லுக்கிற்கு சிவகார்த்திகேயன் தனது உடலை ட்ரான்ஸ்பர்மேஷன் செய்திருக்கிறார். குறிப்பாக சிவகார்த்திகேயன் முதல் முறை தனது படத்திற்காக சிக்ஸ் பேக் முயற்சி செய்திருப்பதாகவும் அந்த லுக் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் தற்போது செய்திகள் பரவி வருகின்றன. சிவகார்த்திகேயனின் அந்த மிரட்டலான லுக்கில் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தற்சமயம் SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது 77வது சுதந்திர தின விழாவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் காஷ்மீரில் தனது படப்பிடிப்பிலிருந்து வீடியோ மூலம் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அந்த வீடியோவில், “200 வருடங்களாக அடிமைப்பட்டு கிடந்து போராடி பெற்ற இந்திய விடுதலையை போற்றுவோம். ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் வெயிலும் பணியும் பாராமல் இமயம் முதல் குமரி வரை கம்பீரமாய் நின்று நம்மை இன்று வரை சுதந்திர காற்றை சுவாசிக்க வைக்கும் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குவோம் இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தாய் மண்ணிற்கு வணக்கம்” என பேசி இருக்கிறார். சிவகார்த்திகேயன் பேசிய அந்த வீடியோ இதோ…