தமிழ் சினிமாவில் வரும் நாட்களில் வரவிருக்கும் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் இருந்து வருகிறது. டாக்டர், டான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகவிருக்கும் மாவீரன் திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடப்படும் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ரசிகர்களின் மனம் கவர்ந்து உலக மேடைகளில் அலங்கரித்த மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். பரத் ஷங்கர் இசையில் முன்னதாக வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.

மாவீரன் படத்தின் முதல் பார்வை தொடங்கி இன்று வரை ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வைரலாகி வருகிறது. அதன்படி தற்போது படக்குழு மற்றொரு அப்டேட்டினை வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்புகளுடன் வெளியான வீடியோவில் மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு (Pre-release) நிகழ்வு வரும் ஜூலை 2 ம் தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இது தொடர்பாக வெளியான வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை சன் தொலைக்காட்சியும் ஒடிடி உரிமம் அமேசான் பிரைம் தளமும் பெற்றுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

மேலும் மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் Sci Fi திரைப்படமாக உருவாகியுள்ள ‘அயலான்’ திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் SK21 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.