பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக வா வீரா எனும் பாடல் தற்போது வெளியானது. சின்னத்திரையில் தனது கடின உழைப்பால் வளர்ந்து தனக்கே உரித்தான நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்து வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நாயகனாக உயர்ந்து இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியது. இருப்பினும் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகிறது.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . சமீபத்தில் SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்ட நிலையில், இதர அறிவிப்புகள் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர். இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் மாவீரன்.

முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்று ஆஸ்காருக்கான போட்டி வரை சென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் பட டிரைலர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்திலிருந்து அடுத்த ஸ்பெஷல் ட்ரீட்டாக “வா வீரா” எனும் பாடல் தற்போது வெளிவந்துள்ளது. இசையமைப்பாளர் பரத் சங்கர் மற்றும் வைக்கம் விஜயலக்ஷ்மி இணைந்து பாடியிருக்கும் வா வீரா பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வா வீரா பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.