ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் என் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. சின்னத்திரை வழியாக மக்களின் இதயங்களை கொள்ளையடித்து வெள்ளித்திரையில் தனது கடின உழைப்பால் வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற தவறியது. இருப்பினும் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

முன்னதாக இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . சமீபத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்ட நிலையில், இதர அறிவிப்புகள் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர்.

இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் மாவீரன். முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் வென்று ஆஸ்காருக்கான போட்டி வரை சென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான (OTT) டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட வரும் ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.மாவீரன் திரைப்படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வருகிற ஜூலை இரண்டாம் தேதி மாவீரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் தண்ணீருக்குள் ஆக்ரோஷமாக சிவகார்த்திகேயன் கத்தும் ஒரு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் கவனத்தை ஈர்க்கும் அந்த அறிவிப்பு வீடியோ இதோ…