இயக்குனர் AR.முருகதாஸ் அவர்களின் பிறந்த நாள் தினத்தன்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவரது இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அதிகாரம்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார். இந்திய சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக அட்டகாசமான பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குனர் AR.முருகதாஸ் தனது அடுத்த புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைவதாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து இயக்குனர் AR.முருகதாஸ் அவர்களும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது பிறந்த நாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது இந்திய சினிமாவே கொண்டாடும் பிளாக்பஸ்டர் இயக்குனராக திகழும் இயக்குனர் AR.முருகதாஸ் அவர்கள் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

ஆரம்ப கட்டத்தில் தொலைக்காட்சியில் தனது பயணத்தை தொடங்கி கடின உழைப்பால் வளர்ந்து, தற்போதைய தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களின் பட்டியலில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்ற மாவீரன் திரைப்படம் நடிகராகவும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல புகழை பெற்று கொடுத்தது. இடைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த அடுத்த திரைப்படங்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன அந்த வகையில் ஏற்கனவே இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படம் வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸாக உள்ளது. அதற்காக இறுதி கட்ட VFX பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்சமயம் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் SK21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். SK21 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் திரை பயணத்தில் 23 வது திரைப்படமாக உருவாகும் SK23 திரைப்படத்தை இயக்குனர் AR.முருகதாஸ் இயக்குகிறார். இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது X பக்கத்தில், “அன்பான AR.முருகதாஸ் சார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.. என்னுடைய 23 வது படத்தில் உங்களுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி சார்.. உங்களுடைய கதையை கேட்டதில் இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரைப்படம் எல்லா விதத்திலும் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒரு படமாக இருக்கும். இதன் படப்பிடிப்புக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. மிக்க நன்றி சார்.. மீண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்” என குறிப்பிட்டு அவரோடு இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் நீண்ட காலமாக ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயன் - AR.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் SK23 திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளிவந்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். சிவகார்த்திகேயன் வெளியிட்ட அந்த புகைப்படங்கள் மற்றும் பதிவு இதோ…