கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் ரிலீஸாகி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக கொண்டாடப்படும் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற "அக நக" பாடலை பாடி மக்கள் மனதை தனது குரலால் மயக்கிய பாடகி சக்திஸ்ரீ கோபாலன் தற்போது இசையமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் TN 07 AL 4777 திரைப்படத்தில் இடம்பெற்ற “சொர்க்கம் மதுவிலே” பாடல் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சக்திஸ்ரீ கோபாலன் தொடர்ந்து விஜய் ஆண்டனி இசையில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் படத்தின் சூப்பர் ஹிட் பாடலான "என் உச்சி மண்டையில" மற்றும் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த நான் படத்தின் "மக்காயாலா" உள்ளிட்ட பாடல்களை பாடி பிரபலமடைந்தார்.

இதனை அடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடல் படத்தில் இடம் பெற்ற "நெஞ்சுக்குள்ளே" பாடலை பாடி ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த சக்திஸ்ரீ கோபாலன் தொடர்ந்து மரியான் படத்தில் இசைப்புயல் இசையில் பாடிய “எங்க போன ராசா” பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஜீவி பிரகாஷ் குமார் இசையில் ராஜா ராணி படத்தில் “அங்யாடே”, “இமையே இமையே”, அனிருத் இசையில் காக்கி சட்டை படத்தில் “காதல் கண் கட்டுதே” சாம்.சி.எஸ் இசையில் விக்ரம் வேதா படத்தில் “யாஞ்சி யாஞ்சி”, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செக்கச் சிவந்த வானம் படத்தில் “பூமி பூமி” என தொடர்ச்சியாக குறிப்பிடப்படும் சூப்பர் ஹிட் பாடல்களை சக்திஸ்ரீ கோபாலன் பாடி இருக்கிறார். இந்த வரிசையில் கடைசியாக சமீபத்தில் வெளிவந்த பத்து தல படத்தில் “நினைவிருக்கா” மற்றும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் “அக நக” ஆகிய பாடல்களில் தனது குரலால் மக்கள் மனதை வருடினார் சக்திஸ்ரீ சிவகோபாலன்.

இந்த நிலையில் தனது கலை பயணத்தின் அடுத்த கட்டமாக தற்போது இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ள சக்திஸ்ரீ கோபாலன், மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் தி டெஸ்ட் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆயுத எழுத்து & ரங் தே பசந்தி ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தி டெஸ்ட் படத்தில் சித்தார்த் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், காவியத்தலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, கேம் ஓவர், ஏலே, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களை தயாரித்த Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் தி டெஸ்ட் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார். கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகும் தி டெஸ்ட் திரைப்படத்திற்கு விராஜ் சின் கோஹில் ஒளிப்பதிவில் TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என PAN INDIA படமாக தி டெஸ்ட் படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில் பாடகி சக்திஸ்ரீ கோபாலன் தி டெஸ்ட் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்த்துக்களை கூறி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அந்த அறிவிப்பு இதோ…