மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ரிலீஸாகி இருக்கும் டக்கர் திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் டக்கர் திரைப்படத்திலிருந்து அட்டகாசமான ஸ்னீக் பிக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கி பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கியவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த சித்தார்த் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிகப்பு மஞ்சள் பச்சை மற்றும் அருவம் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் சித்தார்த் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்திலும் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனது சொந்த தயாரிப்பில் இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் சித்தா திரைப்படத்திலும் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் சித்தார்த் நடிப்பில் பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக அடுத்து வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் தான் டக்கர்.

கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்திருக்கும் டக்கர் திரைப்படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படத்திற்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில், ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சித்தார்த்தின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட ரிலீஸாக 1234க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கும் டக்கர் திரைப்படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. காதலுக்கு புது அர்த்தம் சொல்லும் வகையில் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்ளும் இந்த ஸ்னீக் பீக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.