இயக்குனர் அட்லீயின் திரைபயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும் ஷாருக் கானின் ஜவான் பட முதல் பத்து நாள் வசூல் விவரம் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய சினிமாவிற்கு மற்றொரு அடையாளமான சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய ஜாம்பவானாக வளர்ந்து நிற்கும் பாலிவுட் திரை உலகின் கிங் ஷாருக் கான் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. ஆரம்பம் முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மாஸாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே பாலிவுட்டிலும் கலக்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்திலும் கலக்கி இருக்கிறார். மேலும் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் ஜவான் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். GK.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள, ஜவான் திரைப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்ய அதிரடியாக ஹிந்தி சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கும் ராக் ஸ்டார் அனிருத் அட்டகாசமாக ஜமான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய இயக்குனர் அட்லீ, ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது 2வது படத்திலிருந்து தளபதி விஜய் உடன் கைகோர்த்து தெறி, மெர்சல் & பிகில் வரிசையாக 3 பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். தமிழில் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தனக்கென தனி வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருந்த இயக்குனர் அட்லீயின் வெற்றிப் பயணம் தற்போது பாலிவுட்டிலும் தொடர்கிறது.

இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படங்களில் ஒன்றாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக கடந்த செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸான ஜவான் படம் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று முதல் நாளிலேயே 129 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அடுத்தடுத்து முதல் நான்கு நாட்களில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாட்களிலும் நூறு கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் திரைப்படம் முதல் 4 நாட்களில் 520.79 கோடி ரூபாய் வசூலித்தது. ஷாருக்கானின் முந்தைய படமான பதான் திரைப்படம் மொத்தமாக 1050 கோடிகளுக்கு மேல் வசூலித்த நிலையில் இந்த சாதனையை ஜவான் படம் எளிதில் முறியடிக்கும் என எதிர்பார்க்கிறது.

இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் முதல் 10 நாட்களின் வசூல் விவரம் தற்போது வெளிவந்திருக்கிறது. நேற்று செப்டம்பர் 17 ஆம் தேதி வரை 10 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இருக்கும் ஜவான் திரைப்படம் மொத்தமாக 797.50 கோடி வசூலித்திருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் நகர்ந்தால் அடுத்த 3 - 4 நாட்களில் ஜவான் படம் ஆயிரம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.