தோழிகளால் புறக்கணிப்பட்ட 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அடுத்த போகான் என்னும் ஊரில் நவோதயா வித்தியாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும், 16 வயது மாணவி, பள்ளியின் விடுதியிலேயே தங்கிப் படித்து வந்தார்.

இந்நிலையில், விடுதியில் உள்ள பிரார்த்தனை அறையில், அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதைக்கண்ட சக பள்ளி மாணவிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலை செய்துகொண்ட மாணவியிடமிருந்து ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒரு நிகழ்வுக்காக, தற்போது வரை தாம் சக தோழிகளால், ஒதுக்கி வைக்கப்படுவதாகவும், தாம் மன்னிக்கப்படாமல் அவமானப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை நேசித்தவர்கள் கூட, விலகிச் சென்றுவிட்டதாகவும், தன்னை நம்பாதவர்கள் இருக்கும் இடத்திலிருந்து எப்படி 12 ஆம் வகுப்பு வரை படித்து முடிக்க முடியும்? என்றும், இதனால், தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என்றும் அவர், கடிதத்தில் கூறியுள்ளார்.

இது தொடர்பாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் சக தோழி ஒருவர் கூறும்போது, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, மற்றொரு பெண்ணின் தின்பண்டத்தைத் திருடி இவர் சாப்பிட்டுவிட்டார் என்றும், அதற்காக அனைவரும் சேர்ந்து அவரை அடித்ததாகவும் விளக்கம் அளித்தார்.

இதனிடையே, பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.