தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக தொடர்ச்சியாக ரசிகர்கள் விரும்பும் அட்டகாசமான பாடல்களை கொடுத்து வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய சந்தோஷ் நாராயணன் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், இறுதிச்சுற்று, காதலும் கடந்து போகும், மனிதன், இறைவி, கபாலி, கொடி, காஷ்மோரா, பைரவா, மேயாத மான், காலா, பரியேறும் பெருமாள், வடசென்னை, ஜிப்சி, கர்ணன், ஜெகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை என ஒவ்வொரு படத்திலும் பின்னணி இசை - பாடல்கள் என தனது மிக தனித்துவமான இசையால் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்து வருகிறார்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான், இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி, இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த குலுகுலு, ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி, வைகைப்புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டு அந்தாதூன் படத்தின் ரீமேக்காக நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகன், தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் தசரா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கும் ஜிகர்தண்டா DOUBLE X, பிரபாஸ் நடிப்பில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக தயாராகும் ப்ராஜெக்ட் கே மற்றும் மாரி செல்வராஜின் வாழை ஆகிய திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார். மேலும் அஜித் குமாரின் 62வது திரைப்படமாக தயாராகும் AK62 படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பாடல்களின் நீளம் குறித்து பேசியபோது, "உதாரணத்திற்கு கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். எங்களிடம் ஒரு வெர்ஷன் இருக்கிறது. அதை இதுவரை நாங்கள் வெளியிடவில்லை. இதுவரை அனைவரும் கேட்டது ஒரு வெர்ஷன் தான். ஆனால் எங்களிடம் அதைவிட பெரிய நீளமான வெர்ஷனில் நெருப்புடா பாடல் இருக்கிறது. எப்போதுமே இந்த வெர்ஷன் நெருப்புடா பாடலை வெளியிட வேண்டும் என நான் நினைப்பேன். நாங்கள் நினைத்தது இந்த பாடல் வெறும் தீம் பாடல் தான். அதைத் தவிர வேறு எதுவும் திட்டமிடவில்லை. ஆனால் வெளிவந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. எனவே இந்த வெர்ஷனை நாங்கள் வெளியிடவில்லை. அந்தப் பாடல் செல்லும் போக்கிலேயே போகலாம் என நினைத்தோம்." என தெரிவித்துள்ளார். இன்னும் பல அசத்தலான விஷயங்களை பகிர்ந்து கொண்ட சந்தோஷ் நாராயணனின் அந்த முழு பேட்டி இதோ…