நடிகர் சந்தானத்தின் அடுத்த காமெடி சரவெடியாக வர இருக்கும் கிக் திரைப்படத்தின் SPECIAL SCENE வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து காமெடியனாக கலக்கி முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தனக்கென தனி ஸ்டைலில் அட்டகாசமான கவுண்ட்டர் காமெடிகள் மூலம் மக்கள் மனதை வென்ற நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திலிருந்து கதாநாயகனாக தனது புதிய பாதையை தொடங்கிய சந்தானம் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குளுகுளு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் என வரிசையாக கலக்கலான படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த வரிசையில் கடைசியாக சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பக்கா ஹாரர் காமெடி ட்ரீட்டாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சந்தானத்தின் முந்தைய ஹாரர் காமெடி திரைப்படங்களான தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களில் வரிசையில் வெளிவந்த இந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு தயாராகி வரும் மற்றொரு நகைச்சுவை படமான இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்திலும் சந்தானம் நடிக்க இருப்பதாக தெரிகிறது இதுவரை அது குறித்த எந்த அறிவிப்புகளும் வராத நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இதனிடையே சந்தானம் நடிப்பில் அடுத்த காமெடி சரவெடியாக வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தான் கிக். பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிக் திரைப்படம் சந்தானத்தின் திரைப்பயணத்தில் ஹீரோவாக 15வது திரைப்படமாகும். கிக் திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து தன்யா போப் கதாநாயகியாக நடிக்க, தம்பி ராமையா, ராகினி திவேதி, கோவை சரளா, ப்ரம்மானந்தம், செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில் தயாரித்துள்ள கிக் திரைப்படத்திற்கு, சுதாகர்.S.ராஜ் ஒளிப்பதிவில், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்ய அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். கிக் திரைப்படம் இன்று செப்டம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. சந்தானத்தின் பக்கா காமெடி என்டர்டெய்னராக சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து இந்த கிக் திரைப்படமும் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கிக் திரைப்படத்தின் ரிலீசை முன்னிட்டு படத்தில் இடம் பெற்ற ஸ்பெஷல் காட்சி ஒன்றை படக்குழுவினர் பிரத்தியேகமாக வெளியிட்டுள்ளனர். கலக்கலான அந்த ஸ்பெஷல் காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.