அசுரன் பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பை லண்டனில் துவங்கினார் தனுஷ். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லண்டனில் படமாக்க வேண்டிய காட்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பினர் படக்குழு. இதனைத் தொடர்ந்து பட்டாஸ் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்தார் தனுஷ். தற்போது மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் மதுரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தனுஷ். இந்த படப்பிடிப்பு வரும் டிசம்பர் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது என நெருங்கிய வட்டாரம் மூலம் தகவல் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் தனுஷ் கிடா மீசையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி அசத்தியது. தற்போது பிளாஷ்பாக் காட்சியில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா நட்ராஜன் நடிக்கிறார் என்ற தகவல் தெரியவந்தது. மேலும் சுருளி என்ற பாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது.