நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் #SK21 படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் திருமணம் என்பது போல மிகவும் மோசமான வதந்திகளை பரப்பி வருபவர்களுக்கு நடிகை சாய் பல்லவி பதிலடி கொடுத்து பதிவிட்டு இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகைகளில் ஒருவரான நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு “மலர் டீச்சர்” கதாபாத்திரத்தால் இந்திய அளவில் மிகப் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து சாய் பல்லவி நடித்த தியா, மாரி 2, ஃபிடா உட்பட பல படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த கார்கி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் நாக சைதன்யா தனது திரைப் பயணத்தில் 23 வது படமாக நடிக்கும் NC23 திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்த அறிவிப்பு கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இதனிடையே தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் SK21 படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக்கி வரும் SK21 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற நடைவடைந்த நிலையில் இதர படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. 

இந்த நிலையில் SK21 திரைப்படத்தின் பட பூஜையின் போது படக்குழுவினர் அனைவரும் மாலையுடன் இருந்த புகைப்படங்கள் வெளிவந்திருந்தன. அந்த புகைப்படங்களிலிருந்து நடிகை சாய் பல்லவி மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இருவர் மட்டும் இருக்கும் புகைப்படத்தை இணைத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கொஞ்சமும் அடிப்படையே இல்லாத மிகவும் மோசமான வதந்திகளை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வந்துள்ளனர். இதனால் மிகவும் கோபமடைந்த நடிகை சாய் பல்லவி தற்போது மௌனம் கலைத்து இந்த வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது X பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில்,

“நான் பொதுவாக வதந்திகள் பற்றி பெரிதும் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால், அதுவே என் நண்பர்கள், உறவினர்களை உள்ளடக்கி வரும் போது நான் பேசியாக வேண்டும். எனது புதிய படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படத்தை பணம் கொடுத்து அருவெறுக்கத்தக்க நோக்கத்துடன் பரப்புகின்றனர். நான் எனது புதிய படம் குறித்து சந்தோஷமான அறிவிப்பை வெளியிடும் சமயத்தில், இப்படி வேலை இல்லாதவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியிருப்பது வேதனையளிக்கிறது. இதுபோன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயலை செய்வது மிகவும் மோசமான ஒன்றாகும்!”
என தெரிவித்திருக்கிறார். நடிகை சாய் பல்லவியின் காட்டமான அந்த பதிவு இதோ…