தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் டோலிவுட், பாலிவுட் & ஹாலிவுட் என அசத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில்(2022) மாறன், தி க்ரே மேன்(ஹாலிவுட்), திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. முன்னதாக முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான வாத்தி (SIR) திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்ற தனுஷின் வாத்தி திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக அடுத்து தேசிய விருது பெற்ற பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். தமிழ் , தெலுங்கு & ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜையோடு தொடங்கப்பட்டது. இதனிடையே தனது திரைப்பயணத்தில் அடுத்த மைல் கல்லாக தனுஷ் தனது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். தனுஷின் இந்த 50 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் முக்கிய வேடத்தில் நடிக்க இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான RRR திரைப்படத்திலும் எட்வர்ட் சொன்னேன்பிலிக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.