உலகளவின் புகழின் உச்சிக்கு சென்று இந்திய சினிமாவை பெருமைபட வைத்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி. பிரபல தெலுங்கு இயக்குனரான ராஜமௌலியின் திரைப்படங்கள் டப்பிங் செய்யபட்டு பல மொழி ரசிகர்களை ஆரம்பத்திலே கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘நான் ஈ’ படம் மூலம் இந்தியா அளவு கவனம் பெற்ற ராஜமௌலி பின் 'பாகுபலி' படங்களை எடுத்து உலகளவில் பிரபலமடைந்தார். உலகெங்கிலும் வசூல் வேட்டையாடி மிகப்பெரிய டிரெண்ட் செட் செய்தது. இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகம் மீது கூடுதல் கவனம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்படத்தை தொடர்ந்து ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து பிரிட்டிஷ் கால கதைக்களத்தில் அட்டகாசமான ‘ஆர் ஆர் ஆர்’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று பல உயரிய விருதுகளை குவித்தது. மேலும் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரையில் உள்ளது. உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூலித்து இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது ராஜ மௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம்.

இந்நிலையில் அமெரிக்க மக்களுக்கு ஐந்து படங்களை பரிந்துரைக்க வேண்டும் என்று 'தி நியூயார்க் இதழ்' கேட்டதின் படி ராஜமௌலி சில படங்களை குறிப்பிட்டார், அதில் 1980 ல் தெலுங்கில் வெளியான ‘சங்கராபரணம் , 2003 சஞ்சய் தத் நடிப்பில் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘முன்னா பாய், பூலான் தேவி வாழ்கையை அடிப்படையாக 1994 ல் வெளியான ‘பண்டிட் குயின் இயக்குனர் அனுராக் காஷ்யாப் இயக்கத்தில் 2004 ல் இந்தியில் வெளியான ‘பிளாக் பிரைடே’ மற்றும் தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011 வெளியான ‘ஆடுகளம் ஆகிய திரைப்படங்கள் இடம் பெற்றன.

'பொல்லாதவன்' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இரண்டாவது படம் ‘ஆடுகளம் சேவல் சண்டையை கருவாக வைத்து அதை சுற்றி நிகழும் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து டாப்சி, கிஷோர், நரேன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருப்பார். படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் 6 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஆடுகளம் திரைபடத்தை அமெரிக்கா வாழ் மக்களுக்கு பரிந்துரை செய்ததையடுத்து ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.