தென்னிந்தியாவின் ஆக சிறந்த நடிகர்களில் ஒருவர் மறைந்த நடிகர் ரகுவரன். 1982 ல் வெளிவந்த ஏழாவது மனிதன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரகுவரன் அதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றார். ரஜினிகாந்த், சத்யராஜ், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களில் நடித்தது மட்டுமல்லாமல் தான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் ஈர்த்தார். அதன்படி பல ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்காத கலைஞராய் நடிகர் ரகுவரன் இருந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் ரகுவரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. உயரமான மனிதர் அசாத்தியமான நடிகர் தனித்துவமான உடல்மொழி என்று ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு கூடுதல் சிறப்பை தன் நடிப்பின் மூலம் கொடுத்து அந்த கதாபாத்திரத்தை மக்கள் மத்தியில் பேச வைத்து விடுவார். அதன்படி ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தில் வரும் மார்க் ஆண்டனி, முதல்வன் படத்தில் வரும் முதல்வர் அரங்கநாதன், யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் அப்பா போன்ற பல நூறு கதாபாத்திரங்களை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வைத்துள்ளார்.

குறிப்பாக ரஜினிகாந்த் உடனான கூட்டணியில் வரும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனி சிறப்பு வாய்ந்தது. எப்படி புரட்சி திலகம் எம் ஜி ஆர் அவர்களுக்கு நம்பியார் சிறந்த வில்லனாக இருந்தாரோ அதே போல் ரஜினிக்கு ரகுவரன் இருந்து வந்தார். அதன்படி ஊர்காவலன், சிவா, ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம் ஆகிய திரைப்படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்படும் படமாகவே இருந்து வருகிறது.

பெரும் கலைஞர்களுடன் நடித்த ரகுவரன் உலகநாயகன் கமல் ஹாசனுடன் நடிக்காதது ரசிகர்கள் மத்தியில் தனி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதன் காரணம் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் மறைந்த நடிகர் ரகுவரன் அவரது சகோதரர் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், “கமல் சாருடன் நடிக்க நாயகன் பட வாய்ப்பு வந்தது. நாசர் பண்ணிருந்த போலீஸ் கதாபாத்திரத்திரம் ரகுவரன் பண்ண வேண்டியது. போலீஸ் கதாபாத்திரத்திரம் அதனால் முடி வெட்ட வேண்டும். வேறு ஒரு படத்திற்காக வைத்திருந்த ஹேர் ஸ்டைல் வெட்ட முடியாம போக அந்த படத்தில் நடிக்க முடியாம போயிடுச்சு..

கமல் சார் பெரிய நடிகர் என்பது ரகுவரனுக்கு தெரியும். கமல் சாரும் ரகுவரனை பாரட்டி இருந்துள்ளார். ஆனா சில காரணங்களால் ஒன்றாக படம் நடிக்க முடியாம போயிடுது.. என்றார்.

மேலும் தொடர்ந்து மறைந்த நடிகர் ரகுவரன் அவர்கள் குறித்து பலருக்கும் தெரியாத பல சுவாரஸ்யமான தகவல் குறித்து அவரது சகோதரர் ரமேஷ் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்த தகவல் கொண்ட வீடியோ இதோ..