இதுவரை தளபதி விஜய்யின் திரைப்படங்களுக்கு இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்தின் மீது இத்தனை எதிர்பார்ப்புகள் இருக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன. முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றி, விக்ரம் மற்றும் கைதி ஆகிய படங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU மற்றும் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் பட்டாளம் என ஒவ்வொன்றும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்க, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற, ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்றும், லியோ திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதே ஆயுத பூஜை வெளியிடாக தெலுங்கு சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோ ஒருவரின் திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. முன்னதாக நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சிம்ஹா, லெஜன்ட் மற்றும் அகண்டா ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் போயப்பட்டி சீனி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல ஹீரோக்களில் ஒருவரான நடிகர் ராம் போத்தினேனி, நடிக்கும் #BoyapatiRAPO திரைப்படம் ஆயுத பூஜை வெளியிடாக லியோ படத்துடன் ரிலீஸ் ஆகும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மற்றொரு மாஸ் ஹீரோவாக திகழும் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கும் புதிய அதிரடி திரைப்படமும் இந்த ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 20ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் ஸ்டூரத்புரம் பகுதியில் 1970களில் மிகப் பிரபலமான மற்றும் பயங்கரமான கொள்ளைக்காரனாக வலம் வந்த நாகேஸ்வர ராவ்-ன் பயோபிக் படமாக தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி கிருஷ்ண நாயுடு இயக்குகிறார். மாஸ் மகாராஜா என மக்களால் கொண்டாடப்படும் ரவி தேஜா உடன் இணைந்து காயத்ரி பரத்வாஜ், நிப்பூர் சனான் உள்ளிட்ட பலர் நடிக்கும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கும் நாகேஸ்வரராவ் படத்திற்கு R.மதி ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் ரவிதேஜாவின் திரை பயணத்தில் முதல் PAN INDIA திரைப்படமாக பிரம்மாண்டமாக தயாராகும் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தை தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் ஆயுத பூஜை ரேசில் மற்றொரு மாஸ் ஹீரோவான ரவிதேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படமும் ரிலீஸாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.