ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக, இந்திய சினிமாவில் இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது தளபதி 67 திரைப்படமான லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி 67 திரைப்படத்தின் டைட்டிலான லியோ - ப்ளடி ஸ்வீட் என்பதை அறிவிக்கும் வகையில் தளபதி விஜயின் பக்கா மாஸான ப்ரோமோ வெளியானது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைந்திருக்கும் லியோ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கலை இயக்குனர் N.சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ரத்னகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது லியோ திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், லியோ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ விக்ரம் திரைப்படத்தை போலவே எதிர்பார்ப்புகளைக் கூட்டி இருக்கிறது எனவே லியோ திரைப்படம் எந்த அளவிற்கு இருக்கும்? என கேட்டபோது, "நீங்கள் கேட்ட எல்லா அப்டேட்களுமே கொடுத்து விட்டார்கள் அல்லவா இனி படம் எடுத்ததற்கு பிறகு தான் அதிலிருந்து நாங்களே ஏதாவது வித்தியாசமாக யோசித்து ஒரு அப்டேட் கொடுக்க முடியும். இப்போதைக்கு காஷ்மீரில் படப்பிடிப்பு நல்லமுறையில் நடைபெற்று வருகிறது. நீங்கள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பெரிதாக வைத்துக் கொள்ளுங்கள் அதைவிட பெரியதாக படம் இருக்கும்" என பதிலளித்தார். தொடர்ந்து லியோ திரைப்படம் LCUல் இடம்பெறுமா? என கேட்டபோது, “அது பற்றி இதுவரை எதுவும் சொல்லவில்லை அல்லவா? சொல்லுவார்கள், இதைவிட அதிகமாக 200 மைக்கைகள் இருக்கும் போது அது பற்றி அறிவிப்பார்கள். அது இருக்கிறதா இல்லையா என்று ரிலீஸ் தேதி வரைக்குமே சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் அப்டேட் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என நினைக்கிறேன்” என பதிலளித்தார். பின்னர் லியோ என டைட்டில் வைக்க என்ன காரணம்? என கேட்டபோது, “இதை ஒரு பேன் இந்தியா படமாக வைக்கிறார்கள். எனவே அது கொஞ்சம் சிறியதாகவும் அனைவருக்கும் புரியும் படியாகவும் இருக்க வேண்டும் என அப்படி வைத்திருப்பார்கள்.” என பதிலளித்தார். தொடர்ந்து உங்களுடைய பங்களிப்பு இப்படத்தில் என்ன? எனக் கேட்டபோது, “நான் டிஸ்கஷனில் இருந்தேன். திரைக்கதை மற்றும் வசனங்களில் என்னுடைய பங்களிப்பு இருக்கும். ஒட்டு மொத்தமாக இதுவரை என்ன எதிர்பார்ப்பு இருக்கிறதோ? அதை பூர்த்தி செய்யும் விதமாக தான் படம் கட்டாயம் இருக்கும் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் இன்னொரு நாளில் சொல்கிறேன். இப்போதைக்கு குட்டியாக அழகாக ஒன்று செய்திருக்கிறார்கள் கவனத்தை அதன் மீது மட்டும் வைப்போம். மைக்கை பார்த்தது எனக்கே கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. நன்றி” என தெரிவித்தார். அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே இருக்கும்? என கேட்டபோது, “அது எனக்கே தெரியாது நானே இங்கு இல்லை எங்கோ இருக்கிறேன் என நினைத்திருக்கிறார்கள் அனைவரும் இப்போது தான் நான் சென்னையில் இருக்கிறேன் என்றே பல பேருக்கு தெரிந்திருக்கிறது. நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் காஷ்மீர் போவேன் இதுதான் என்னுடைய அப்டேட் நன்றி” என ரத்னகுமார் பதிலளித்துள்ளார். ரத்னகுமார் பகிர்ந்து கொண்ட இந்த ருசிகர தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.