இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரானவர் இயக்குனர் ஷங்கர். 90 களிலே ரசிகர்களை உலக அனுபவத்தை கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர். தமிழ் சினிமா திரைப்படங்கள் ஒரு வரிசையில் சென்றால் இவர் படங்கள் மட்டும் ஒரு படி மேல் சென்று தனி வரிசையில் சென்று பிரம்மிக்க வைக்கும். அதனாலே ரசிகர்களினால் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுகிறார். இவர் தொடாத திரைப்படங்களின் பிரிவுகளே இல்லை. ஒவ்வொரு படத்திலும் சமூக அக்கறையை கருவாக கொண்டு திரைக்கதை அமைத்து அப்படங்களின் படமாக்கும் நேர்த்தியை படத்திற்கு படம் மெருகேற்றி கொண்டு வருபவர். ரஜினிகாந்த். கமல் ஹாசன், விஜய் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வித்யாசமாக அணுகி பிரம்மிக்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். தமிழ் திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கே மிகப்பெரிய உந்துதலாக இதுவரை இருந்து வருகிறார்.

இவரது முந்தைய திரைப்படமான எந்திரன் 2.0’ விமர்சனம் அடிப்படையில் கலவையான வரவேற்பை பெற்றாலும் மிகப்பெரிய பிரம்மிப்பில் ரசிகர்களை ஆழ்த்தி உலகமெங்கும் வசூல்களை குவித்தது. தற்போது இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்ட படங்களில் பணியாற்றி வருகிறார். ஏற்கனவே தொடங்கப்பட்ட உலகநாயகனின் இந்தியன் 2 ஒருபுறம் சென்னையில் படமாக அதே நேரத்தில் பான் இந்திய திரைப்படமாக பல மொழிகளில் உருவாகி வரும் ‘RC15’ படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

இதில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் பான் இந்திய திரைப்படமான ‘RC15’ படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்பை கொண்டுள்ள RC15 திரைப்படத்திற்கு Game Changer’ என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் அறிவிப்பிற்காக வெளியிடப்பட்ட சிறப்பு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுத்தில் உருவாகி Game Changer படத்தில் ராம் சரண் அவர்களுக்கு கதாநாயாகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கின்றார். இவர்களுடன் நடிகர்கள் அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஜெயராம், சுனில் உள்ளிட்டோர் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். மேலும் ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுகரசு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் தமிழில் எழுத்தாளர் விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் சிறு இடைவெளி விட்ட இயக்குனர் ஷங்கர் அடுத்த ஆண்டு இந்திய சினிமாவிற்கு அடுத்தடுத்து இரண்டு படங்களை கொடுத்து பிரம்மிக்கவிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.