தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயலலிதா. மிகப்பெரிய அந்தஸ்தை திரையுலகில் பெற்ற அவர் பின் திரைத்துறையின் ஜாம்பவானும் மக்களின் புகழ் பெற்ற புரட்சி தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் அரசியல் கட்சியில் உறுப்பினராக இணைந்து மக்கள் சேவையில் ஈடுபட்டார். பின்னாளில் படிப்படியாக கட்சியில் சிறப்பான செயல்பாடுகள் மூலம் ஜெயலலிதா முக்கிய அந்தஸ்துகளில் உயர்ந்து வந்தார். எம் ஜி ஆர் மறைவுக்கு பின் அரசியல் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பை அறிவுப்பூர்வமாக அணுகி பின் கட்சியின் பொதுசெயலாளர் ஆனார். மக்களால் புரட்சி தலைவி என்றழைக்கப்பட்ட ஜெயலாலிதா இதுவரை தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அரசியல் ஆளுமையாகவும் மக்களின் மனம் கவர்ந்த தலைவியாகவும் வலம் வந்த ஜெயலலிதா கடந்த 2016ல் உயிரிழந்தார். மறைவிற்கு பின்னும் இவரது புகழ் மக்கள் மத்தியில் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மறைந்த செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 75 பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் வெகுவிமர்சையாக அவரது ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் கொண்டாடியும் அனுசரித்தும் வருகின்றனர்.

இதனையடுத்து இந்தியாவின் மிகப்பெரிய திரை நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஜெயலலிதா குறித்து,

"மதிப்பிற்குரிய அமரர் புரட்சி தலைவி ஜெயலலிதாவுடைய 75 வது பிறந்தநாளில் அவர் இப்போ நம்ம கூட இல்லையே என்ற வருத்தத்தோட அவரை நினைவுகூருகிறேன். ஜெயலலிதா போல இன்னொரு பெண்மணிய பார்க்கவே முடியாது. அதற்கு காரணம் அவருடைய அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை. மதிப்பிற்குரிய எம்ஜிஆர் சார் அவர்களுக்கு 'புரட்சி தலைவர்' என்று பெயர் வந்ததற்கு காரணம் அனைவருக்கும் தெரியும். ஒரு நடிகனாக இருந்து ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆட்சி பிடித்து முதலமைச்சரனார். மிகப்பெரிய புரட்சி அது.. அவர் மறைவிற்கு பிறகு அந்த கட்சி பிளவுப்பட்ட போது அந்த கட்சியில் மிகப்பெரிய திறமையான அனுபவசாலி தலைவர்கள் இருக்கும் போது ஒரு தனிப்பெண்மணி பிளவுப்பட்ட கட்சியை ஒன்றாக இணைத்து இன்னும் பலப்படுத்தி மேலும் பெரிய கட்சியாக்கி பல ஆண்டு கள் தமிழ்நாட்டை ஆண்டவர் மதிப்பிற்குரிய ஜெயலலிதா அவர்கள். இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் தலைவர்களும் ஜெயலலிதா அவர்களை அவ்வளவு மதித்தார்கள், அவருடைய திறமையை பார்த்து பிரம்மித்தார்கள்.. ஒரு காலக்கட்டத்தில் எனக்கும் ஜெயலலிதா அவருக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது. அதனால அவருக்கு எதிரா பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன்பிறகு என்னுடைய பெண் திருமணத்திற்கு அவரை அழைக்க போகும் போது அதெல்லாம் மறந்து என் பெண் திருமணத்திற்கு வந்து திருமணத்தை நடத்தி கொடுத்தார். அவ்வளவு பெரிய கருணை உள்ளம். அவங்க நாமம் வாழ்க. நன்றி" என்றார் ரஜினி காந்த். இதனையடுத்து ரஜினிகாந்த் அவர்களின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.