இந்திய சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று உலகளவில் ரசிகர் கூட்டத்தை தக்க வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். பல தசாப்தங்களாக தனது தனித்துவமான நடிப்பு திறமையினால் ரசிகர்களை கவர்ந்து ஆண்டு கொண்டிருக்கும் ஆளுமையாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். தனது ரசிகர் கூட்டத்தின் வழியாக சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பல ஆண்டுகளாக மக்கள் பணியில் ரஜினி ரசிகர்கள் இறங்கியுள்ளனர். அதன்படி இத்தனை ஆண்டுகள் நிறைய மக்கள் நலதொண்டில் இறங்கி பல மாறுதல்களை இதுவரை அவரது ரசிகர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த செயல்பாட்டினை கொண்டாடும் வகையிலும் ரசிகர்கள் மன்றங்களை கௌரவிக்கும் வகையிலும் பல பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கவும் ரஜினி ரசிகர்கள் மாபெரும் விழாவினை ஒருங்கிணைக்க திட்டமிட்டிருந்தனர்.

அந்த மாபெரும் நிகழ்வின் தலைப்பினை திரைப்பிரபலமும் ரஜினி ரசிகர்களுமான சிவகார்த்திகேயன் , இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகரும் இயக்குனருமான ராகாவ லாரன்ஸ் ஆகியோர் வெளியிட்டனர்.அதன்படி நிகழ்வின் தலைப்பானது ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்று வைத்தனர். இந்நிகழ்வு வரும் மார்ச் 26 ம் தேதி சென்னை YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவிருந்தது. இந்நிலையில் நடைபெறவிருந்த விழா நிறுத்தப் பட்டுள்ளதாக அமைப்பினர் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதில் அவர்கள் குறிப்பிட்டவை, “சென்னை நந்தளம் Y.M.C.A திடலில் மார்ச் 26அன்று நடைபெறவிருந்த சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்கள் தொண்டாற்றும் "மனிதம் காத்து மகிழ்வோம்" விழா தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.. சிரமத்திற்கு மன்னிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும்.” என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரசிகர்கள் வருத்தங்களுடன் அந்த பதிவினை பகிர்ந்து வருகின்றனர். ரஜினிகாந்த் விழாவிறல் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் முன்னதாக வெளியானது. ரஜினிகாந்த் தற்போது படப்பிடிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளதால் வர இயலாமலாகிருக்கும் அதனால் தான் விழா நிறுத்தப் பட்டுள்ளது என்ற தகவலும் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.