ஜட்டியுடன் 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரபல ரவுடியாக திகழ்ந்த விக்ரம் குர்ஜார்வை, சமீபத்தில் அபோலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ஆனால், விக்ரம் குர்ஜார் கைது செய்யப்பட்ட செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த ரவுடி வைக்கப்பட்ட காவல் நிலையத்திற்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் வந்த ஒரு ரவுடி கும்பல், அந்த காவல் நிலையத்தையே சூறையாடி, அங்கிருந்த போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

மேலும், கைது செய்யப்பட்டு விசாரணைக்காகக் காவல் நிலையத்திலிருந்த விக்ரம் குர்ஜார்வையும், அந்த கும்பல் மீட்டுச் சென்றது. சினிமா பாணியில் மின்னல் வேகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தையே அதிர வைத்தது.

காவல் நிலையத்தை சூறையாடியது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 13 பேரைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அந்த 13 ரவுடிகளையும், ஜட்டியுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக நடந்தே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, அந்த 13 பேருடன் கமாண்டோ படையினர் உட்பட மொத்தம் 150 போலீசார் உடன் வந்தனர். இந்த நிகழ்வை, அந்த வழியாக வந்து சென்ற பலரும், தங்கள் செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இதனிடையே, 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, ஜட்டியுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு, மனித உரிமை மீறல் என்று சர்ச்சையை எழுந்துள்ளது.