மாஸ் காமர்ஷியல்களில் நடித்து இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த்தை மாறுபட்ட கதைகளத்தில் கொண்டு வந்து மெகா ஹிட் கொடுத்த திரைப்படம் ‘சந்திரமுகி’. மலையாள திரையுலகில் மோகன் லால் நடிப்பி வெளியான ‘மணிசித்திரதாழ்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான சந்திரமுகி படத்தை இயக்குனர் பி வாசு இயக்கியுள்ளார். கடந்த 2005 ல் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய பிளாஸ் பஸ்டர் ஹிட் கொடுத்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாவும் இப்படம் இமாலய வெற்றியை சிவாஜி தயாரிப்பு நிறுவனத்திற்கு தந்தது. மேலும் இப்படம் ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்து வரும் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நாயகனாக இரண்டு வேடங்களில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவர்களுடன் படத்தில் ‘வைகை புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஸ்ருஷ்தி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் MM. கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற சந்திரமுகி 2 படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தற்போது இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக லாரன்ஸ் மற்றும் வடிவேலு ஆகியோரின் டப்பிங் வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடதக்கது.

பக்காவான ஹாரர் மற்றும் காமெடி கதைகளத்தில் மாறுபட்ட கோணத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஆவல் இருந்து வருகிறது. இந்நிலையில் சந்திரமுகி 2 படக்குழு அட்டகாசமான அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வரும் வேட்டையன் கதாபாத்திரத்தின் அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பு தற்போது ரசிகர்களால் இணையத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. சந்திரமுகி முதல் பாகத்தில் வேட்டையன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மாஸ் காட்டியிருப்பார் அந்த கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது குறிப்பிடதக்கது.

குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படாக உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.