தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ் அவர்களின் அட்டகாசமான நடிப்பில் கடந்த ஏப்ரல் 14 ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியான திரைப்படம் ‘ருத்ரன்’. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் திரைப்படமாக வெளியான ருத்ரன் திரைப்படம் ரசிகர்களின் ஆராவரத்துடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. திரையரங்குகளில் குடும்பங்களுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக குவியும் சம்பவங்கள் பல இடங்களில் நிகழ்ந்தேறி வருகிறது.

இந்த வெற்றியை பயனுள்ள வகையில் கொண்டாட வேண்டும் என்ற விதத்தில் ருத்ரன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான கதிரேசன் படத்தின் கதையாசிரியர் திருமாறன் மாற்றும் நடிகர் இளவரசு ஆகியோர் சென்னையில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருக்கும் முதியோர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு உணவும், அத்யாவசிய பொருட்களும் அளித்து மகிழ்ந்தனர். மேலும் இல்லத்திற்கு படக்குழு சார்பில் நன்கொடையும் வழங்கினர்.

இந்த வித்யாசமான பயனுள்ள வெற்றி கொண்டாட்டம் குறித்து இயக்குனர் கதிரேசன் பகிர்ந்து கொண்டவர், “ருத்ரன் திரைப்படத்திற்கு தங்களது மேலான ஆதரவை அளித்த ரசிகப்பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் மையக்கருவே வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்களது பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என்பது தான். எனவே பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுடன் திரைப்பட வெற்றியை கொண்டாடியது மிகுந்த மனநிறைவு அளிக்கிறது," என்றார்.

இந்த நிகழ்வு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்படத்தின் துவக்கத்தில் இருந்தே உதவு மனப்பான்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தொடங்கி இன்று அப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான கதிரேசன் வரையில் மக்களுக்கு பயனுள்ள வரையில் பல உதவிகள் வழங்கி வருகின்றனர்.

மாஸ் சண்டை காட்சிகளும் குடும்ப உணர்வுகளும் கலந்து உருவான ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சரத் குமார் நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளதுனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்ய ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். ருத்ரன் திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தை எட்டும் நிலையிலும் கூட்டம் குறையாமல் அபிமான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.