தென்னிந்தியத் திரையுலகின் ஃபேவரட் இயக்குனர், நடன இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக அசத்தும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஆக்சன் த்ரில்லர் படமாக தயாராகியிருக்கும் ருத்ரன் இந்த ஆண்டு(2022) டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அதிகாரம் திரைப்படமும் லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வருகிறது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த சந்திரமுகி திரைப்படத்தின் 2வது பாகமாக, சந்திரமுகி 2-வில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தையும் இயக்குனர் P.வாசு இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பாகுபலி,RRR படங்களின் இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 குறித்த ருசிகர தகவல் தற்போது பகிர்ந்துள்ளார்.

சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக பிரத்யேகமாக தனது லுக்கை மாற்ற இருக்கும் ராகவா லாரன்ஸ் தனது உடலை புதிய மாற்றத்திற்கு உட்படுத்த உள்ளதாக தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது உடலின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படங்களை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அனைவருக்கும் வணக்கம்! உங்கள் அனைவருக்கும் 2 விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக எனது உடலை புதிய மாற்றத்திற்கு உட்படுத்த சிறிய முயற்சி எடுத்துள்ளேன். இந்த மாற்றத்திற்கு உதவிய பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. இரண்டாவதாக, எனது அறக்கட்டளைக்கு இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாய் இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி. எனது நோக்கத்திற்காக துணைநின்று நீங்கள் அனைவரும் நன்கொடை அளித்து வந்தீர்கள். என்னால் முடிந்ததை நான் சிறப்பாக செய்தேன் எனக்கு உதவி தேவைப்படும் போது உங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டேன். இப்போது நான் நல்ல இடத்தில் இருக்கிறேன். நிறைய திரைப்படங்களுக்கு கையெழுத்திட்டுள்ளேன். எனவே இனி எனது அறக்கட்டளைக்கான நிதித் தேவைக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அதனால் எனது அறக்கட்டளைக்கு இனி நீங்கள் நன்கொடை வழங்க வேண்டாம். உங்கள் ஆசீர்வாதங்களே எனக்கு போதும். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் அளித்த அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. விரைவில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்வேன்." என தெரிவித்துள்ளார். ராகவா லாரன்ஸின் அந்த பதிவு இதோ...


Hi everyone! I want to share a small update about Chandramukhi 2 and my trust! pic.twitter.com/jLPrVm7q3N

— Raghava Lawrence (@offl_Lawrence) September 13, 2022