கடந்த மே 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஃபர்ஹானா’. பிரபல திரைப்படங்களான ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இஸ்லாமிய பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு விஜே சாபு ஜோசப் படதொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அவர்களின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி இஸ்லாமிய மதத்தினரை இழிவு செய்யுமளவு படம் உள்ளது என்று சிலர் சர்ச்சையை உருவாக்கினார். பின் படத்தினை தடை செய்யுமாறும் ஆர்பட்டம் நடைபெற்றது. மிகப் பெரிய அளவு சர்ச்சையை உருவாக்கியதையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட படக்குழுவினருக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. சர்ச்சைகளை தாண்டி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று கவனம் பெற்று வருகிறது.

படம் பார்த்த ரசிகர்கள் படத்தினையும் படத்தில் பணியாற்றிய குழுவினர்களையும் நடிகர்களையும் பாராட்டி தங்கள் கருத்துக்களை இணைய தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் திரையரங்குகளில் இல்லாமல் பைரசியில் ‘ஃபர்ஹானா’ திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படத்தில் நடித்த ஜித்தன் ரமேஷ் அவர்களின் காட்சியை இணையத்தில் பதிவிட்டு அதனுடன் ஜித்தன் ரமேஷ் அவர்களின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவினை ‘ஃபர்ஹானா’ படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அவர்கள் பகிர்ந்து அதனுடன், “பைரசியில் படம் பார்த்தாலும் அந்த காட்சியை பகிர்ந்து பாராட்டுறீங்க பாருங்க.. அந்த மனசு தான்..” என்று பதிவிட்டு அதனுடன் #SayNoToPiracy என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தயாரிப்பாளரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து பைரசியில் படம் பார்த்து பாராட்டிய ரசிகரை இணையத்தில் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Piracy la padam paarthaalum…screen grab panni paaraatureenga parunga…antha Manasu thaan bro…😍😍🤗🤗#Farhana #SayNoToPiracy😁😁 https://t.co/JC4cuQUtVT

— SR Prabu (@prabhu_sr) May 15, 2023