தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் SR.பிரபு தொடர்ந்து தரமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு வழங்கி வருகிறார். ஜோக்கர், அருவி உள்ளிட்ட சிறந்த படைப்புகளை வழங்கி வரும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம், நடிகர் கார்த்தி நடிப்பில் சகுனி, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி மற்றும் சுல்தான் என ஐந்து திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த வரிசையில் ஆறாவது திரைப்படமாக தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. தற்போதைய இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த கைதி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்ததோடு விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுகளை பெற்றது.

பாடல்கள் மற்றும் ஹீரோயின் இல்லாமல் மிக நேர்த்தியான திரைக்கதை மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளோடு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய கைதி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றது. மேலும் பாலிவுட்டில் போலா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தி சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான அஜய் தேவகன் இயக்கி நடித்துள்ள இந்த போலா திரைப்படத்தை அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட், டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. அஜய் தேவ்கன் உடன் இணைந்து நரேன் நடித்த பிஜாய் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்க, சஞ்சய் மிஸ்ரா, தீபக் தோப்ரியால், கஜ்ராஜ் ராவ், வினித் குமார், கிரன் குமார், மார்கண்ட் தேஸ்பாண்டே, ஹர்பீட் ரங்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள போலா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை அமலாபால் நடிக்க, நடிகை ராய் லட்சுமி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் நடிகர் அபிஷேக் பச்சன் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

அசிம் பஜாஜ் ஒளிப்பதிவில், தர்மேந்திர ஷர்மா படத்தொகுப்பு செய்துள்ள போலா திரைப்படத்திற்கு KGF படத்தின் இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். கைதி திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உச்சகட்ட அதிரடி ஆக்ஷனில் 3டி தொழில்நுட்பத்தில் போலா திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இன்று மார்ச் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் போலா திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் கைதி திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதற்கு நிகராக இல்லை எனவும் அதிகமான கமர்சியல் விஷயங்களால் கைதி படத்தின் சுவாரசியங்கள் இதில் ரசிக்கும்படி இல்லை எனவும் ஒருபுறம் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தயாரிப்பாளர் SR.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “போலா திரைப்படத்தின் வாயிலாக இந்தி திரையுலகின் உள்ளே செல்வது மகிழ்ச்சி... இது ஒரு சிறப்பான பயணம். சிறந்த அனுபவத்தை அமைத்து கொடுத்த அனைவருக்கும் நன்றி... கைதி திரைப்படத்தை ரீமேக் செய்வது கொஞ்சம் கடினமானது... எனவே முற்றிலும் வேறு ஒன்றை நாங்கள் முயற்சி செய்திருக்கிறோம். தயவு செய்து இதை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். போலா படத்தை அப்படியே கொண்டாடுங்கள்” என பதில் அளித்துள்ளார். தயாரிப்பாளர் SR.பிரபு அவர்களின் அந்த பதிவு இதோ…