தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய திரைப்படமாக அமைந்த ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஃபர்ஹானா’. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இஸ்லாமிய பெண் சந்திக்கும் பிரச்சனைகள் சார்ந்து திரைக்கதை உருவாகி இருக்கும் இப்படம் வெளியாவதற்கு முன்பே படம் இஸ்லாமிய சமூதாயத்தை இழிவு படுத்தும் நோக்கில் உள்ளது என்ற சர்ச்சை கிளம்பியது. மேலும் சிலரால் ஃபர்ஹானா திரைப்படம் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்ற பிரசாரமும் எழுந்தது. தடைகளை தாண்டி ஃபர்ஹானா திரைப்படம் வரும் மே 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு படம் குறித்து பேசினார்.

அதில், “நெல்சன் என்ற நல்ல மனிதர், கலைஞருடன் படம் பண்ணனும் அப்படிங்குற உத்வேகத்துல ஆரம்பிக்கப்பட்ட படம் இது.. 3 கதைகளுக்கு மேல் நெல்சனிடம் பேசினோம். அடுத்த 2 வருஷத்துல 3 படம் பண்றோம் னு ஆரம்பிச்சு இப்போ 3 வருஷத்துல 1 படம் பண்ணிருக்கோம். நெல்சன் கதையில் அவ்ளோ நுணுக்கங்களை சரிபார்ப்பார். அவர் நிபந்தனைகள் வைத்ததால் ஃபர்ஹானா படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.. உதாரணமா மான்ஸ்டர் படம் பண்ணப்போ அதில் இடம் பெற்ற எலி உண்மையான எலி என்று சொன்னால் ஏமாத்தாதீங்க னு சொல்லி நம்ப மாட்டங்க.. அந்த படத்தில் பயன்படுத்த பட்ட வீடு முழுக்க முழுக்க செட் .. இது போன்ற நுணுக்கமான விஷயங்களை நெல்சன் மெனக்கெட்டு செய்வார். பர்ஹானா மூன்று மொழிகளில் ரிலீஸாகிறது. இப்படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள், மதம் சார்ந்த விஷயங்கள் கிடையாது. மனிதர்களின் பிரச்சனையா காட்டாமல் மனிதருடைய பிரச்சனையா காட்டிருக்கோம். இஸ்லாமிய சகோதரர்கள் பயப்படும் படமாக இல்லாமல் கொண்டாடும் படமாக இருக்கும் என்று உறுதியெடுக்கிறேன்.” என்றார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு.