இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக கொண்டாடப்படும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக சாதனை படைத்துள்ளது. சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்ய லெக்ஷ்மி, கிஷோர் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் எக்ஸிக்யூடிவ் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் அவர்கள் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளிவந்த பிறகு பொன்னியின் செல்வன் வாசகர்கள் பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்த கிளைமாக்ஸ் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது குறித்து அவரிடம் கேட்டபோது,

“இதுதான் முதல் முறையாக நாம் ஒரு படத்தை இரண்டு பாகங்களாக பார்க்கிறோம். SEQUEL பார்த்திருக்கிறோம் ஒரு படத்தை இரண்டு பாகங்களாக முதல் முறை இப்போதுதான் பார்க்கிறோம் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு காட்ஃபாதர் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அது பல தசாப்தங்களாக நடக்கும் ஒரு கதை. இரண்டாம் பாகத்தில் பார்த்தீர்கள் என்றால் எப்படி 1917ல் வீட்டோ கோர்லியோனே அமெரிக்காவிற்கு வந்தார். 1940 களில் இருந்து ஒரு 30 வருடங்கள் பின்னோக்கி செல்லும், மூன்றாவது பாகத்தை எடுத்துக்கொண்டால் 30 வருடங்கள் முன்னோக்கி செல்லும். எந்த படம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் அது SEQUEL என வரும்போது அது பல காலகட்டங்களில் நடப்பதாகத்தான் இருக்கும். ஆனால் பொன்னியின் செல்வன் மொத்தமாகவே ஒரு மாதத்திற்குள் நடக்கக்கூடிய கதை. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் ஒரு ரகசிய கூட்டம் நடக்கப் போகிறதாம் போய் பார்த்துவை என வந்தியத் தேவனின் சொல்வதில் ஆரம்பித்து ராஜராஜ சோழன் முடி சூட்டிக் கொள்ளும் வரை அது ஒரு குறுகிய காலகட்டம் தான். இது உண்மையில் ஒரு கதை. ஒவ்வொரு முறையும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தால் அது கதையின் போக்கையும் கதைக்கான நேர்மையையும் கெடுத்து விடும். இரண்டாவது பாகம் ஆரம்பிக்கும் போது ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மூடில் இருக்கிறோம். இளவரசர் இறந்து விட்டார்… இன்னொரு பட்டத்து இளவரசர் கோபமாக இருக்கிறார்… மகாராஜா கவலையில் இருக்கிறார். பழிவாங்க ஒரு கூட்டம் இருக்கிறது… என்பதெல்லாம் முதல் பாகத்தின் கிளைமாக்ஸிலேயே இருக்கிறது. எனவே இரண்டாம் பாகத்தின் வேகமும் அதனுடைய போக்கும் அதற்கு தகுந்த மாதிரி தான் எழுத முடியும். எனவே அதில் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறோம்."

என பதில் அளித்துள்ளார். தயாரிப்பாளர் சிவா ஆனந்த் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.